புரோ கபடி சீசன் 5: சாம்பியன் பட்டமே இலக்கு
கபடி விளையாட்டை பற்றி பேசுவதாக இருந்தால் இந்திய அணியின் தற்போதைய கேப்டனான அனுப் குமாரின் பெயரை உச்சரிக்காமல்


கபடி விளையாட்டை பற்றி பேசுவதாக இருந்தால் இந்திய அணியின் தற்போதைய கேப்டனான அனுப் குமாரின் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது. இந்திய கபடி வரலாற்றில் தலைசிறந்த ரைடர்களில் ஒருவர், தலைசிறந்த கேப்டன், ஆகச்சிறந்த வீரர், ஹரியாணா காவல் துறையின் சீனியர் இன்ஸ்பெக்டர் என பன்முகங்களைக் கொண்டவராக திகழ்கிறார் அனுப் குமார்.
புரோ கபடி லீகில் யு-மும்பா அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆஜானுபாகுவான தோற்றம், கபடி வீரருக்கே உரிய கட்டுமஸ்தான உடல்வாகு, கம்பீரமான நடையுடன் காணப்பட்டாலும், பழகுவதற்கு மென்மையான மனிதர். களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டாலும், களத்துக்கு வெளியே நகைச்சுவையோடு, புன்னகை ததும்ப பேசுகிறார். புகழின் உச்சத்தில் இருந்தாலும், கர்வம் துளியும் இல்லை. எளிமையான மனிதராகவே இருக்கிறார். அனைவரோடும் இயல்பாக பழகுகிறார்.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் வரும் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்காக மாஷல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் மும்பையில் நடைபெற்ற புரோ கபடி லீக் கருத்தரங்கில் பங்கேற்ற அனுப் குமாருடன் பேசியதிலிருந்து...
ஒரு கபடி வீரராக நீங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி...
அப்பா ராணுவ அதிகாரி. குருகிராம் அருகேயுள்ள எனது சொந்த ஊரான பால்ராவில் கபடிதான் பிரபல விளையாட்டு. அதனால் நானும் கபடி விளையாடத் தொடங்கினேன். பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்தேன். ஆரம்ப காலத்தில் மட்டுமே அணியில் 7 பேரில் ஒருவராக இடம்பிடிக்க கஷ்டப்பட்டேன். அதன்பிறகு நான் ஒருபோதும் மாற்று வீரராக வெளியில் அமர வைக்கப்பட்டதில்லை.
சிஆர்பிஎஃப், ஏர் இந்தியா போன்ற அணிகளுக்காக விளையாடியபோதெல்லாம் பெரும்பாலும் கேப்டனாகவே செயல்பட்டுள்ளேன். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறேன். கபடி, என் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. சாதாரண மனிதனான எனக்கு பணம், புகழ் எல்லாமே கபடியால்தான் கிடைத்திருக்கிறது. நான் எங்கு சென்றாலும், என்னோடு செல்ஃபி எடுக்க போட்டி போடுகிறார்கள். கபடி இல்லை என்றால், நான் இப்போது உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது.
உங்கள் கபடி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் ஏதாவது?
2012-இல் அர்ஜுனா விருது பெற்றது, 2016 உலகக் கோப்பை போட்டியில் எனது தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது, புரோ கபடி 2-ஆவது சீசனில் யு-மும்பா அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தது.
ஒரு கேப்டனாக களத்தில் ஏற்படும் நெருக்கடியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
கேப்டன் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். கேப்டனாக இருப்பவர் தானும் சிறப்பாக விளையாட வேண்டும், சகவீரர்களையும் சரியான முறையில் வழிநடத்த வேண்டும். எல்லா விளையாட்டிலுமே நெருக்கடியை சந்தித்துதான் ஆகவேண்டும். அதுபோன்ற சூழல்களில் அமைதியாகவே இருப்பேன். சகவீரர்களிடம் கோபப்படமாட்டேன். ஒருவேளை நான் கோபத்தில் அவர்களை நோக்கி உரக்கக் கத்தினால், மேலும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். அதன் காரணமாக அவர்கள் தவறு செய்யக்கூடும். எனவே அவர்களிடம் கோபப்படுவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களின் ஆட்ட உத்திகளை மாற்றுமாறு கூறுவேன்.
சில நேரங்களில் சில வீரர்கள், அவர்களின் விருப்பப்படியே விளையாட முயற்சிப்பார்கள். அப்போது இப்படித்தான் விளையாட வேண்டும் என்று அவர்களை வற்புறுத்த மாட்டேன். ஏனெனில் நமக்கு தேவை புள்ளிகள்தான். அது எப்படி கிடைத்தால் என்ன? அதேநேரத்தில் அவர்களுடைய ஆட்ட உத்தி எடுபடாதபோது, இப்போது நான் சொல்வது போன்று விளையாடுங்கள் என கூறுவேன்.
5-ஆவது சீசன் புரோ கபடி லீகில் உங்களின் இலக்கு என்ன?
சாம்பியன் கோப்பையை தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வரவேண்டும். அதில் சமரசமில்லை. இந்த முறை 3 மாதங்கள் போட்டி நடைபெறவுள்ளது. எல்லா அணியினருமே தங்களின் 8 அல்லது 9 வீரர்கள் இந்த சீசனில் முழுமையாக விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்கு 'பிட்னஸ்' மிக முக்கியமாகும். அதற்காக டேராடூனில் 20 நாள் பயிற்சியை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்.
உங்களுக்கு வேறு விளையாட்டில் ஆர்வம் உண்டா?
எப்போதாவது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடுவேன்.
உங்கள் 'ஃபிட்னஸின்' ரகசியம்?
பழங்கள், முட்டையின் வெள்ளைக்கரு, பாதாம், சப்பாத்தி போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்கிறேன். தினந்தோறும் 2 லிட்டர் பால் அருந்துகிறேன்.
அடுத்த தலைமுறை வீரர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...
முன்பெல்லாம் கபடிக்கு பெரிய எதிர்காலம் கிடையாது. புரோ கபடி லீகின் வருகைக்குப் பிறகு கபடி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இளம் வீரர்கள் கடுமையாக உழையுங்கள். சீனிர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளுங்கள். உணவில் கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். நிச்சயம் பெரிய வீரராக உருவெடுக்க முடியும்.
எதிர்காலத்தில் கபடி அகாதெமி தொடங்கும் திட்டம்...
எனது சொந்த கிராமத்தில் ஒரு அகாதெமியை தொடங்கும் திட்டம் உள்ளது. அது பற்றி பின்னர் உங்களுக்கு சொல்கிறேன்.
ஹரியாணா காவல் துறையில் ஒரு சீனியர் இன்ஸ்பெக்டராக உங்களின் சாதனை...
நான் பெரும்பாலான நாள்கள் கபடி பயிற்சி முகாமிலேயே இருக்கிறேன். அதனால் காவல் துறையில் இதுவரை எதையும் சாதிக்கவில்லை. ஒரு திருடனைக்கூட பிடிக்கலை பாஸ் (சிரிக்கிறார்). ஆனால் ஹரியாணா காவல் துறையின் டிஜிபியாக வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
* சாதாரண மனிதனான எனக்கு பணம், புகழ் எல்லாமே கபடியால்தான் கிடைத்திருக்கிறது. நான் எங்கு சென்றாலும், என்னோடு செல்ஃபி எடுக்க போட்டி போடுகிறார்கள். கபடி இல்லை என்றால், நான் இப்போது உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது. *
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...