

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கடந்த 2014-ஆம் ஆண்டு சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பனிச்சறுக்கு பிரிவில் தங்கம் வென்ற ரஷிய வீரர் அலெக்ஸாண்டர் லெகோவ் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து அணிகளுக்கான 50 கிலோ மீட்டர் ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு பிரிவில் அவர் வென்ற பதக்கம் திரும்பப் பெறப்பட்டதுடன், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. அத்துடன், இதே குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றொரு ரஷிய பனிச்சறுக்கு வீரரான எவ்ஜெனி பெலோவும் தகுதிநீக்கம் செய்யப்பட்டதுடன், அவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இருவர் மீதான இந்த நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஒசி) புதன்கிழமை மேற்கொண்டது. இவர்கள் தவிர, சோச்சி ஒலிம்பிக் போட்டியின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக மேலும் 26 ரஷிய வீரர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
அலெக்ஸாண்டரின் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும், "அலெக்ஸாண்டரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட புட்டிகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதனுள் இருக்கும் மாதிரியை சேதப்படுத்தும் நோக்கில் புதிதாக சிறுநீர் மாதிரிகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட சிறுநீரின் மரபணு, சம்பந்தப்பட்ட சிறுநீர் மாற்று பாலினத்தவருடையது என்பதைக் காட்டுகிறது" என்றார் விசாரணை அதிகாரி மெக் லாரென்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.