மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் சாதித்திருக்க முடியாது: மிர்கா குறித்து ஃபெடரர் பெருமிதம்!
தன்னால் முடியாது என்று அவர் சொல்லியிருந்தால் என்னால் இந்த டென்னிஸ் வாழ்க்கை சாத்தியமாகியிருக்காது...


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இது, ஃபெடரர் வெல்லும் 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதேவேளையில் இது அவரின் 6-ஆவது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 3 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்ற ஃபெடரர் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீருடன் ரசிகர்கள் முன்பு பேசினார். 20 பட்டங்களுடன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர்களின் வரிசையில் நான்காம் இடம் வகிக்கிறார். இதன் அடிப்படையில் ஆடவர் வரிசையில் ஃபெடரரே முதலிடம் வகிக்கிறார்.
அதிக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்
மார்கரெட் கோர்ட் - 24
செரீனா வில்லியம்ஸ் - 23
கிராஃப் - 22
ஃபெடரர் - 20
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபெடரர், தனது மனைவி மிர்கா குறித்து பெருமையாகப் பேசினார். அவர் கூறியதாவது:
நான் இன்னமும் நன்றாக விளையாடி வருவதைக் கண்டு என் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதைக் காண்பது திருப்தியளிக்கிறது. நான் விளையாடும் போட்டிகளுக்கு அவர்கள் வருகிறார்கள். இன்னமும் நன்றாக விளையாட அது உத்வேகமளிக்கிறது. இந்த வெற்றிகள் அனைத்தும் என் மனைவி மிர்காவால் சாத்தியமாகியுள்ளது. அவர் ஆதரவில்லாமல் கடந்த சில வருடங்களாக என்னால் டென்னிஸ் விளையாடியிருக்க முடியாது.
பல வருடங்களுக்கு முன்பு அவருக்கு இதைச் செய்வது விருப்பமான என இருவரும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறோம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டு எனக்கு மிகவும் ஆதரவளித்துள்ளார். என்னாலும் குழந்தைகளை இரண்டு வாரங்களுக்கு மேல் பிரிந்திருக்கமுடியாது. தன்னால் முடியாது என்று அவர் சொல்லியிருந்தால் என்னால் இந்த டென்னிஸ் வாழ்க்கை சாத்தியமாகியிருக்காது. பல புதிர்கள் ஒன்றானதால்தான் என்னால் இங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கமுடிகிறது என்று கூறியுள்ளார்.

ஃபெடரரின் மனைவி மிர்கா முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. 2000 சிட்னி ஒலிம்பிக்ஸின்போது இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். காலில் காயம் ஏற்பட்டதால் 2002-ல் டென்னிஸிலிருந்து விலகினார் மிர்கா. ஏழு வருடங்கள் கழித்து ஃபெடரரும் மிர்காவும் திருமணம் செய்துகொண்டார்கள். 2009 ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது. ஜூலையில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. 2014-ல் மீண்டும் இரட்டைக் குழந்தைகள். இந்தமுறை ஆண் குழந்தைகள் பிறந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...