நதீம் 5 விக்கெட்டுகள்: டிரா ஆன 3-வது ஆட்டம்; தொடரை வென்ற இந்திய ஏ அணி!

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய ஏ அணி வென்றுள்ளது...
நதீம் 5 விக்கெட்டுகள்: டிரா ஆன 3-வது ஆட்டம்; தொடரை வென்ற இந்திய ஏ அணி!
Published on
Updated on
2 min read

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய ஏ அணி வென்றுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான 3-வது ஆட்டம்  டிராவில் முடிந்தது. 

டிரினிடாட் டரெளபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 67.5 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விஹாரி 55 ரன்களும் விக்கெட் கீப்பர் சஹா 62 ரன்களும் எடுத்து கெளரவமான ஸ்கோர் கிடைக்க உதவினார்கள். மே.இ. தீவுகள் அணித் தரப்பில் சிகே ஹோல்டர், அகிம் ஃபிரேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மே.இ. தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், சுழற்பந்துவீச்சாளர் கே. கெளதம் அசத்தலாகப் பந்துவீசி மே.இ. தீவுகள் அணியை 194 ரன்களுக்குள் சுருட்டினார். கெளதம் ஹாட்ரிக்குடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி மூன்று விக்கெட்டுகளும் ஹாட்ரிக் முறையில் வீழ்ந்தன. 

முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய ஏ அணி, 2-ம் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்து தடுமாறியது. எனினும் நேற்று இந்திய ஏ அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. நதீம் 13 ரன்களில் ஆட்டமிழந்தபிறகு ஷுப்மன் கில்லும் கேப்டன் விஹாரியும் அற்புதமான கூட்டணியை அமைத்தார்கள். 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய ஏ அணி, கடைசியில் அதற்குப் பிறகு ஒரு விக்கெட்டையும் இழக்காமல் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இளம் வீரர் ஷுப்மன் கில் இரட்டைச் சதமடித்து அசத்தினார். விஹாரி சதமடித்தார். இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் முறையே 204, 118 ரன்கள் எடுத்தார்கள். 

இந்த ஆட்டத்தில் மே.இ. அணி வெற்றி பெற 373 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 3-ம் நாளின் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தது. கடைசி நாளில் வெற்றி பெற 10 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் 336 ரன்கள் தேவை. இதனால் இந்த ஆட்டத்திலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று, அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்கிற கணக்கில் முழுமையாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நாள் ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணி 109 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. சோலோஸனா 92, பிஏ கிங் 77, அம்ப்ரிஸ் 69 ரன்கள் எடுத்து இந்திய ஏ அணியின் வெற்றியைத் தடுத்து நிறுத்தினார்கள். இந்திய ஏ அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷபாஸ் நதீம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 3-வது டிரா ஆனது. தொடரை 2-0 என இந்திய ஏ அணி வென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com