தொடர் வெற்றியை நோக்கி முன்னேறும் இந்திய அணி: ஆறு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது...
India vs Australia Live Score
India vs Australia Live Score
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இதனால் இந்திய அணி தொடர் வெற்றியை நெருங்கும் நிலையில் உள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார்கள். இதன்பிறகு நேற்று 10 ஓவர்கள் வரை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. ஹாரிஸ் 19, கவாஜா 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் 598 ரன்கள் பின்தங்கியிருந்தது. இன்றைய ஆட்டத்தின் முதல் பகுதி ஆஸி. அணிக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது. தொடக்க வீரர் ஹாரிஸ் விரைவாக ரன்கள் சேர்த்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் கவாஜா 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 67 பந்துகளில் அரை சதம் எட்டினார் ஹாரிஸ். 2-வது விக்கெட்டுக்கு ஹாரிஸும் லபுஸ்சானும் 103 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள். உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. 

ஆனால் அதன்பிறகு தனது வழக்கமான சறுக்கலை எதிர்கொண்டது ஆஸி. அணி. ஜடேஜா பந்தைத் தவறுதலாக ஆடி 79 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹாரிஸ். ஷான் மார்ஸ் 8 ரன்கள் மட்டும் எடுத்து ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். மிகவும் சோம்பலான ஃபுட்வொர்க் என்று வர்ணனையில் அவரை விமரிசனம் செய்தார் முன்னாள் கேப்டன் கிளார்க். இதன்பிறகு கோலி விரித்த வலையில் வீழ்ந்தார் லபுஸ்சான். லெக் சைட் பகுதியில் பேட்ஸ்மேனுக்கு அருகே ஃபீல்டர்களை நிற்கவைத்துப் பரிசோதித்துப் பார்த்தார் கோலி. அவர் எண்ணியதுபோலவே அப்பகுதியில் நின்றிருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 38 ரன்களில் வெளியேறினார் லபுஸ்சான். ரஹானே அருமையான ஃபீல்டர் என்பதால் நொடிப்பொழுதில் அதைச் சரியாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்தத் தொடரில் ஓரளவு நன்கு விளையாடிய டிராவிஸ் ஹெட், பந்துவீசிய குல்தீப் யாதவிடமே கேட்ச் கொடுத்து 20 ரன்களில்  ஆட்டமிழந்தார். இதன்பிறகும் ஆஸி.  அணியின் தடுமாற்றம் நிற்கவில்லை. கேப்டன் பெயின் 5 ரன்களில் குல்தீப் பந்தில் போல்ட் ஆனார். 

ஆஸ்திரேலிய அணி 83.3 ஒவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன்பிறகு ஆட்டத்தை மீண்டும் தொடங்கமுடியாமல் போனது. இதனால் நாளை அரை மணி நேரம் முன்பாக ஆட்டம் தொடங்கவுள்ளது. 3-ம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் 386 ரன்கள் பின்தங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. ஹெண்ட்காம்ப் 28, கம்மின்ஸ் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்தியத் தரப்பில் குல்தீப் 3 விகெட்டுகளும் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் ஷமி 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com