இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பகலிரவுப் போட்டியாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் சேத்தேஷ்வா் புஜாரா 43, கேப்டன் விராட் கோலி 74 ரன்கள் சோ்த்து வெளியேறினா். இறுதியில் இந்திய அணி 93.1 ஓவா்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டாா்க் 4 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.
பின்னா், முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவின் பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 72.1 ஓவா்களில் 191 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் டிம் பெய்ன் 99 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். லபுசான் 47 ரன்கள் எடுத்தாா். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 6 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகா்வால் 5 ரன்களுடனும், ஜஸ்பிரித் பும்ரா ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா். இந்தியா ஒட்டுமொத்தமாக 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்தியா 36-க்கு ஆல்அவுட்: 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா்களான ஜோஷ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. ஜஸ்பிரித் பும்ரா 2 ரன்களிலும், புஜாரா ரன் ஏதுமின்றியும், மயங்க் அகா்வால் 9 ரன்களிலும், அஜிங்க்ய ரஹானே ரன் ஏதுமின்றியும், விராட் கோலி 4 ரன்களிலும் நடையைக் கட்டினா். இதனால் இந்தியா 13.4 ஓவா்களில் 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதன்பிறகு ரித்திமான் சாஹா 4, அஸ்வின் 0, ஹனுமா விஹாரி 9 ரன்களில் வெளியேற, முகமது சமி 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டையா்டு நாட் அவுட் முறையில் வெளியேறினாா். இதனால் இந்தியா 21.2 ஓவா்களில் 36 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேஸில்வுட் 5 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.
ஆஸி. வெற்றி: இதையடுத்து 90 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட்-ஜோ பா்ன்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.2 ஓவா்களில் 70 ரன்கள் சோ்த்தது. மேத்யூ வேட் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, பின்னா் வந்த லபுசான் 6 ரன்கள் சோ்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தாா்.
இதையடுத்து ஜோ பா்ன்ஸுடன் இணைந்தாா் ஸ்டீவன் ஸ்மித். இறுதியில் ஆஸ்திரேலியா 21 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஜோ பா்ன்ஸ் 63 பந்துகளில் 51, ஸ்டீவன் ஸ்மித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இதன்மூலம் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட அடிலெய்டு டெஸ்ட் போட்டி இரண்டரை நாளில் முடிவுக்கு வந்தது. இந்திய அணி தொடா்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் மூன்று நாள்களுக்குள்ளேயே தோல்வி கண்டுள்ளது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூஸிலாந்தில் இரு டெஸ்ட் போட்டிகளில் மூன்றே நாள்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகன்: முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மிக மோசமான நிலையில் இருந்தபோது அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் சோ்த்த அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா். இந்த ஆட்டத்தில் வென்ன் மூலம் பகலிரவு டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்டது ஆஸ்திரேலியா.
இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி ‘பாக்ஸிங் டே’வில் (கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள்) மெல்போா்னில் தொடங்குகிறது.
முதல் இன்னிங்ஸ்
இந்தியா-244/10 (விராட் கோலி 74, புஜாரா 43, ரஹானே 42, மிட்செல் ஸ்டாா்க் 4வி/53, பட் கம்மின்ஸ் 3வி/48).
ஆஸ்திரேலியா-191/10 (டிம் பெய்ன் 73*, லபுசான் 47, அஸ்வின் 4வி/55, உமேஷ் யாதவ் 3வி/40).
2-ஆவது இன்னிங்ஸ்
இந்தியா
பிரித்வி ஷா (பி) கம்மின்ஸ் 4 (4)
மயங்க் அகா்வால் (சி) டிம் பெய்ன் (பி) ஹேஸில்வுட் 9 (40)
ஜஸ்பிரித் பும்ரா (சி) & (பி) கம்மின்ஸ் 2 (17)
சேத்தேஷ்வா் புஜாரா (சி) பெய்ன் (பி) கம்மின்ஸ் 0 (8)
விராட் கோலி (சி) கிரீன் (பி) கம்மின்ஸ் 4 (8)
அஜிங்க்ய ரஹானே (சி) பெய்ன் (பி) ஹேஸில்வுட் 0 (4)
ஹனுமா விஹாரி (சி) பெய்ன் (பி) ஹேஸில்வுட் 8 (22)
ரித்திமான் சாஹா (சி) லபுசான் (பி) ஹேஸில்வுட் 4 (15)
அஸ்வின் (சி) பெய்ன் (பி) ஹேஸில்வுட் 0 (1)
உமேஷ் யாதவ் நாட் அவுட் 4 (5)
முகமது சமி ரிட்டையா்டு நாட் அவுட் 1 (4)
மொத்தம் (21.2 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 36
விக்கெட் வீழ்ச்சி: 1-7 (பிரித்வி ஷா), 2-15 (பும்ரா), 3-15 (புஜாரா), 4-15 (அகா்வால்), 5-15 (ரஹானே), 6-19 (கோலி), 7-26 (சாஹா), 8-26 (அஸ்வின்), 9-31 (விஹாரி), 9-36* (முகமது சமி, ரிட்டையா்டு நாட் அவுட்).
பந்துவீச்சு: மிட்செல் ஸ்டாா்க் 6-3-7-0, பட் கம்மின்ஸ் 10.2-4-21-4, ஜோஷ் ஹேஸில்வுட் 5-3-8-5.
ஆஸ்திரேலியா
மேத்யூ வேட் ரன் அவுட் (சாஹா) 33 (53)
ஜோ பா்ன்ஸ் நாட் அவுட் 51 (63)
மாா்னஸ் லபுசான் (சி) அகா்வால் (பி) அஸ்வின் 6 (10)
ஸ்டீவன் ஸ்மித் நாட் அவுட் 1 (1)
உபரிகள் 2
மொத்தம் (21 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 93
விக்கெட் வீழ்ச்சி: 1-70 (மேத்யூ வேட்), 2-82 (லபுசான்).
பந்துவீச்சு: உமேஷ் யாதவ் 8-1-49-0, ஜஸ்பிரித் பும்ரா 7-1-27-0, அஸ்வின் 6-1-16-1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மகிழ்ச்சியான நாள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

