ரோஹித் சதம், கோலி அரைசதம்: தொடரை வென்று இந்தியா அபாரம்!
ஆஸ்திரேலியாவுடனான 3வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.


ஆஸ்திரேலியாவுடனான 3வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 287 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பீல்டிங்கின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் களமிறங்கவில்லை. இதன் காரணமாக கேஎல் ராகுலே மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
ரோஹித் சர்மா அட்டகாசமாக அதிரடியுடன் தொடங்க, ராகுல் நிதானம் காட்டினார். இருந்தபோதிலும் 19 ரன்கள் மட்டுமே எடுத்த ராகுல் அகார் சுழலில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு துணை கேப்டனுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார்.
இரண்டு அனுபவ வீரர்களும் தங்களது அனுபவத்தை வெளிப்படுத்தி பாட்னர்ஷிப் அமைத்தனர். சுழற்பந்துவீச்சில் ரன் குவிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேகப்பந்துவீச்சைக் குறிவைத்து, அந்த ஓவர்களில் அதிரடி காட்டி விளையாடினர். இதனால், இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
இந்த இணையைப் பிரிக்க பகுதிநேர பந்துவீச்சாளர்களான லாபுஷேன் மற்றும் ஃபின்ச் பந்துவீசியும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், ஹேசில்வுட் வீசிய 30வது ஓவரில் ஒரு ரன் எடுத்த ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 29வது சதத்தைப் பதிவு செய்தார்.
இதன்பிறகு, விராட் கோலியும் தனது ஆட்டத்தை சற்று துரிதப்படுத்த அவரும் அரைசதத்தை எட்டினார். இந்நிலையில், ஸாம்பா சுழலில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரோஹித் சர்மா 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இணை 2வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது.
இதனால், ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் விராட் கோலியும், ஷ்ரேயஸ் ஐயரும் சற்று அதிரடி காட்ட இந்திய அணி நெருக்கடி நிலையை எதிர்கொள்ளவில்லை. இருவரும் வெற்றியை நோக்கி பவுண்டரிகளாக அடிக்க ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றி மிக எளிதானது. குறிப்பாக ஹேசில்வுட் ஓவரில் ஷ்ரேயஸ் ஐயரின் ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங் பலத்தை நிரூபித்தது.
இதையடுத்து, விராட் கோலி சேஸிங்கில் மீண்டும் ஒரு சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் போல்டானார். இதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயரும் மணீஷ் பாண்டேவும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 289 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் ஐயர் 44 ரன்களும், மணீஷ் பாண்டே 8 ரன்களும் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...