/

ஆஷஸ் டெஸ்ட்: நான்கு மாற்றங்களுடன் இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
இங்கிலாந்து அணி
Updated On :25 டிசம்பர் 2021, 9:29 am

DIN

ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டையும் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டையும்  ஆஸி. அணி எளிதாக வென்றது. ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3-வது டெஸ்ட், மெல்போர்னில் நாளை (டிசம்பர் 26) தொடங்குகிறது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

இந்நிலையில் மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பர்ன்ஸ், ஆலி போப், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு கிராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, மார்க் வுட், ஜேக் லீச் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள். 

ஆஸி. அணியில் காயம் காரணமாக ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். இதனால் ஸ்காட் போலண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகவுள்ளார். காயத்திலிருந்து ஜோஷ் ஹேசில்வுட் இன்னும் குணமாகவில்லை. கேப்டன் கம்மின்ஸ் அணியில் மீண்டும் இடம்பெறுவதால் மைக்கேல் நசீர் மெல்போர்ன் டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை. 

இங்கிலாந்து: ஹசீப் அஹமது, ஸாக் கிராவ்லி, டேவிட் மலான், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஆலி ராபின்சன், மார்க் வுட், ஜேக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.