கரோனா பாதிப்பு எதிரொலி: பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களைத் தேர்வு செய்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் முதல் தேர்வு வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
கரோனா பாதிப்பு எதிரொலி: பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களைத் தேர்வு செய்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஒன்பது புதிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடியது இலங்கை அணி. டி20 தொடரை 3-0 என்றும் ஒருநாள் தொடரை 2-0 என்றும் இங்கிலாந்து அணி வென்றது.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு இங்கிலாந்து அணியினருக்கு வழக்கமான கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அணியில் இருந்த இதர இங்கிலாந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதில் உள்ள சிக்கலே பாகிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி அடுத்ததாக விளையாடவுள்ளது. இரு அணிகளும் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகின்றன. ஒருநாள் தொடர் வியாழன் (ஜூலை 8) முதல் தொடங்குகிறது. 

சக வீரர்களில் மூவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியின் முதல் தேர்வு வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஒன்பது புதிய வீரர்களைத் தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். காயம் காரணமாக ஓய்வில் இருந்த பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து ஒருநாள் அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேக் பால், டேனி பிரிக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, பென் டக்கட், லூயிஸ் கிரேகரி, டாம் ஹெல்ம், வில் ஜாக்ஸ், டான் லாரன்ஸ், சகிப் முகமது, டேவிட் மலான், கிரைக் ஓவர்டன், மேட் பார்கின்சன், டேவிட் பெய்ன், பில் சால்ட், ஜான் சிம்ப்சன், ஜேம்ஸ் வின்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com