
விஜய் ஹசாரே போட்டியில் 800 ரன்களை எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் இளம் வீரர் பிரித்வி ஷா.
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி 4-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரப் பிரதேசம் 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் அடித்தது. உத்தர பிரதேச அணியில் அதிகபட்சமாக மாதவ் கௌஷிக் 15 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 158 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். அடுத்து ஆடிய மும்பை 41.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து வென்றது. மும்பை இன்னிங்ஸில் ஆதித்யா தாரே 18 பவுண்டரிகள் உள்பட 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கிடைத்தது.
மும்பையின் கேப்டன் பிரித்வி ஷா, இந்தத் தொடரில் மொத்தமாக 827 ரன்கள் அடித்துள்ளாா். சராசரி - 165.40. இது, இப்போட்டியின் ஒரு பருவத்தில் தனியொரு வீரரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2017-18 போட்டியில் மயங்க் அகர்வால் 723 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 21 வயது ஷா, நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் நான்கு சதங்கள் அடித்துள்ளார் பிரித்வி ஷா. இதனால் இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.