இந்திய வீரர்கள் அச்சமடைந்தது ஏன்?: 5-வது டெஸ்ட் ரத்தானது பற்றி தினேஷ் கார்த்திக் விளக்கம்
வேறு யாருக்காவது கரோனா ஏற்பட்டிருந்தால் இந்தளவுக்குப் பயந்திருக்க மாட்டார்கள்.


அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சமடைந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியானது.
எனினும் இன்று மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். வரும் நாள்களில் கரோனா பாதிப்பு மேலும் அதிகமானால் என்ன செய்வது என அவர்கள் அச்சப்பட்டார்கள். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பிசிசிஐ. இதன் முடிவில் 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 5-வது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த விரும்புவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் என்ன காரணத்துக்காக 5-வது டெஸ்டில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள் என்பதை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்கை கிரிக்கெட் தொலைக்காட்சிக்கு தினேஷ் கார்த்திக் பேட்டியளித்ததாவது:
சிலரிடம் நான் பேசினேன். 4-வது டெஸ்டுக்குப் பிறகு அனைவரும் சோர்வடைந்து விட்டார்கள். கிட்டத்தட்ட எல்லா டெஸ்டுகளும் கடைசி வரை சென்றன. அதனால் அவர்கள் சோர்வடைந்து விட்டார்கள். அவர்கள் வசம் ஒரு பிசியோதெரபிஸ்ட் தான் தற்போது உள்ளார். இருவர் இருந்தார்கள். ஆனால் ஒருவரைத் தனிமைப்படுத்தினார்கள். சில பயிற்சியாளர்கள் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே இருந்த ஒரு பிசியோதெரபிஸ்டிடம் அனைவரும் பணியாற்றியுள்ளார்கள். இப்போது அவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதுதான் பிரச்னை. அணி ஊழியர்களில் வேறு யாருக்காவது கரோனா ஏற்பட்டிருந்தால் இந்தளவுக்குப் பயந்திருக்க மாட்டார்கள். ஆனால் அனைவருக்கும் சிகிச்சை செய்த பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா என்றவுடன் வீரர்கள் மிகவும் பயந்து விட்டார்கள்.
இதையும் புரிந்துகொள்ள வேண்டும். 5-வது டெஸ்ட் முடிந்த பிறகு அனைவரும் ஐபிஎல் போட்டியில் விளையாடச் செல்கிறார்கள். அதன்பிறகு டி20 உலகக் கோப்பை. பிறகு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் உள்ளது. ஒரு வார இடைவெளியில் அவர்களால் எத்தனை கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியும்? இங்கிலாந்து வருவதற்காக இந்தியாவில் அனைவரும் மே 16 அன்று ஒன்றுகூடினார்கள். நான்கு மாதங்களாகி விட்டன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...