இந்தியாவிடம் இங்கிலாந்து இதைச் செய்திருக்காது: மைக்கேல் ஹோல்டிங் விமர்சனம்

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து, இந்த நடவடிக்கையை இந்தியாவிடம் செய்திருக்காது என...
இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த இங்கிலாந்து, இந்த நடவடிக்கையை இந்தியாவிடம் செய்திருக்காது என முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி.  எனினும் போட்டி தொடங்கும் தினத்தன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், ஸ்கை ஸ்போர்ட் தொலைக்காட்சிக்கு இந்த விவகாரம் குறித்துப் பேசியதாவது: 

பாகிஸ்தானில் நான்கு நாள் மட்டுமே இங்கிலாந்து வீரர்கள் தங்க இருந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த நடவடிக்கையை ஒருபோதும் அவர்கள் இந்தியாவிடம் செய்திருக்க மாட்டார்கள். இது மேற்கத்திய ஆணவத்தின் வெளிப்பாடு. நான் உன்னை எப்படி நடத்தவேண்டும் என்று எண்ணுகிறேனோ அப்படித்தான் நடத்துவேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் விரும்புவதைச் செய்வேன். 

நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இந்தியா வசதிமிக்க கிரிக்கெட் வாரியம். சக்திமிக்கது. பாகிஸ்தானில் இங்கிலாந்து வீரர்கள் நான்கு நாள்களுக்குத்தான் தங்க இருந்தார்கள். ஆனால் தடுப்பூசி இல்லாத நிலையிலும் கடந்த வருடம் பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தில் ஆறு, ஏழு வாரங்களைச் செலவிட்டார்கள். கரோனா தடுப்பு வளையத்தில் இருந்து கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்றார்கள். நானும் தடுப்பு வளையத்தில் இருந்தேன். அது நல்ல அனுபவமாக இல்லாவிட்டாலும் பொதுமக்களிடையே இருப்பதை விடவும் அது பாதுகாப்பாக இருந்தது. அப்போது கரோனா தடுப்பூசி யாருக்கும் வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தில் தங்கி விளையாடினார்கள். பாகிஸ்தான் அணி எப்படி மரியாதை செலுத்தவேண்டும் என இங்கிலாந்து விரும்பியதோ அப்படியே அவர்கள் செய்தார்கள். இப்போது அதற்குச் சிறிய அளவில் நன்றி செலுத்த இங்கிலாந்துக்கு வாய்ப்பு இருந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com