ஹாக்கி ஸ்டார்ஸ்: எட்டு விருதுகளையும் அள்ளி இந்திய அணி சாதனை

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2021-ம் ஆண்டுக்கான ஹாக்கி ஸ்டார்ஸ் விருதுகள் அனைத்தையும்...
ஹாக்கி ஸ்டார்ஸ்: எட்டு விருதுகளையும் அள்ளி இந்திய அணி சாதனை

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2021-ம் ஆண்டுக்கான ஹாக்கி ஸ்டார்ஸ் விருதுகள் அனைத்தையும் இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகள் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி வெண்கலம் வென்று சாதனை படைத்தது. 1980-க்குப் பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெற்ற ஒலிம்பிக் பதக்கம் என்பதால் இந்திய ரசிகர்களும் பிரபலங்களும் ஹாக்கி வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள்.

தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியிலேயே அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில், ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் பங்கேற்று 4-ம் இடம் பிடித்தது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியதால் அனைவருடைய பாராட்டுகளும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குக் கிடைத்தன.

சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2021-ம் ஆண்டுக்கான ஹாக்கி ஸ்டார்ஸ் விருதுகளுக்கு எட்டு இந்தியர்கள் பரிந்துரைக்கப்பட்டார்கள். ஆறு வீரர், வீராங்கனைகளும் இரு பயிற்சியாளர்களும் அதில் இடம்பெற்றார்கள்.

இதற்கான வாக்கெடுப்பில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஹாக்கி சங்கங்கள், ரசிகர்கள், வீரர்கள், ஊடகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு வாக்களித்தார்கள். ஹாக்கி சங்கங்களின் சார்பில் அந்தந்த நாடுகளின் கேப்டன்களும் பயிற்சியாளர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள். அவர்களுடைய வாக்குகள் 50 சதவீதமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ரசிகர்கள், வீரர்களின் வாக்குகள் 25% மற்றும் ஊடகர்களின் வாக்குகள் 25% என்கிற வகையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 3 லட்சம் ரசிகர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் ஹாக்கி ஸ்டார்ஸ் விருதுகளில் உள்ள எட்டு விருதுகளையும் இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்தவர்களே வென்றுள்ளார்கள்.

சிறந்த வீரராக ஹர்மண்ப்ரீத் சிங்கும் சிறந்த வீராங்கனையாக குர்ஜித் கெளரும் தேர்வாகியுள்ளார்கள். சிறந்த கோல் கீப்பராக ஆடவர் பிரிவில் ஸ்ரீஜேஷும் மகளிர் பிரிவில் சவிதாவும் தேர்வாகியுள்ளார்கள். சிறந்த இளம் வீரராக விவேக் சாகர் பிரசாத்தும் சிறந்த இளம் வீராங்கனையாக ஷர்மிளா தேவியும் தேர்வாகியுள்ளார்கள். சிறந்த பயிற்சியாளர்களாக இந்திய அணியில் பணியாற்றிய கிரஹாம் ரீடும் (ஆடவர்), ஸூர்ட் மரைனே (மகளிர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com