இரு புதிய அணிகளும் மகளிர் ஐபிஎல் போட்டியும்: பிரபல ஆஸி. வீராங்கனையின் ஆதங்கம்

ஐபிஎல் போட்டி முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய வீராங்கனை மந்தனா
இந்திய வீராங்கனை மந்தனா

மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ விரைவில் தொடங்கவேண்டும் என்று பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் இது முடிவானது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் புதிதாக இரு அணிகள் பெரிய தொகையை வழங்கி சேர்ந்ததால் மகளிர் ஐபிஎல் போட்டியை ஆரம்பிப்பது பற்றி பிசிசிஐ யோசிக்க வேண்டும் என பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:

அலிஸா ஹீலி
அலிஸா ஹீலி

ஐபிஎல் போட்டியின்போது நடைபெறும் மகளிர் காட்சிப் போட்டிகளை ஒத்திவைத்ததில் நான் ஏமாற்றமடைந்தேன். (ஆடவருக்கான) ஐபிஎல் போட்டியை நடத்துவதில் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்தார்கள். ஐபிஎல் போட்டி முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கிறார்கள். ஆனால் தள்ளிவைக்கப்பட்ட மகளிர் காட்சிப் போட்டிகளை நடத்துவதைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. இரு புதிய அணிகளால் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. அதில் கொஞ்சம் மகளிர் கிரிக்கெட்டுக்கும் மகளிர் ஐபிஎல் போட்டிக்கும் செலவழிக்கப்படும் என நினைக்கிறேன். மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்தி இந்திய மகளிர் அணி எத்தகையை திறமைகளைக் கொண்டுள்ளது என்பதை உலகுக்குத் தெரிவிக்கவேண்டும். மகளிர் பிக் பாஷ் டி20 போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதை முன்வைத்து மகளிர் ஐபிஎல் போட்டி குறித்த பேச்சு தொடங்கும் என நம்பிக்கை வைக்கிறேன். இந்தியத் திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவே மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட வேண்டும் என்றார்.

31 வயது அலிஸா ஹீலி 5 டெஸ்ட், 82 ஒருநாள், 121 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com