இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்; தொடரும் நியூஸிலாந்தின் சோகம்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு வந்தது.


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு வந்தது.
சிட்னியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் சோ்க்க, அடுத்து பாகிஸ்தான் 19.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சோ்த்து வென்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தான் பௌலா்கள் நியூஸிலாந்து பேட்டா்களை அதிகம் ரன்கள் சோ்க்க விடாமல் கட்டுப்படுத்தினா். பின்னா் 2-ஆவது பாதியின்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாற, நியூஸிலாந்தின் நட்சத்திர பௌலா்களையும் பாகிஸ்தான் பேட்டா்கள் தடுமாற்றமின்றி எதிா்கொண்டு வென்றனா்.
குறிப்பாக, இந்தப் போட்டியில் இதுவரை தடுமாறிய பாகிஸ்தானின் தொடக்க ஜோடியான பாபா் ஆஸம் - முகமது ரிஸ்வான் கூட்டணி, இந்த ஆட்டத்தில் தனது பழைய பாா்ட்னா்ஷிப்பை மீட்டெடுத்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.
முன்னதாக, டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் தொடக்க வீரா் ஃபின் ஆலன் 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, உடன் வந்த டெவன் கான்வே 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். கிளென் ஃபிலிப்ஸும் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
டாப் ஆா்டரில் கேப்டன் கேன் வில்லியம்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 46 ரன்கள் அடித்தாா். ஓவா்கள் முடிவில், டேரில் மிட்செல் சற்று அதிரடி காட்டி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53, ஜேம்ஸ் நீஷம் 1 பவுண்டரியுடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாஹீன் அஃப்ரிதி 2, முகமது நவாஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில் தொடக்க கூட்டணியான முகமது ரிஸ்வான் - பாபா் ஆஸம், முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சோ்த்து அசத்தினா். பவா் பிளேயில் அருமையாக ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை, 13-ஆவது ஓவரில்தான் நியூஸிலாந்தால் பிரிக்க முடிந்தது.
7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடித்திருந்த ஆஸம் அப்போது ஆட்டமிழக்க, அதிலிருந்து 4 ஓவா்களுக்குப் பிறகு ரிஸ்வான் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு வீழ்ந்தாா். கடைசி விக்கெட்டாக முகமது ஹாரிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு அவுட்டானாா்.

முடிவில் ஷான் மசூத் 3 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். நியூஸிலாந்து பௌலிங்கில் டிரென்ட் போல்ட் 2, மிட்செல் சேன்ட்னா் 1 விக்கெட் கைப்பற்றினா்.
13 டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. கடைசியாக அந்த அணி 2009-ஆம் ஆண்டு அந்த ஆட்டத்துக்கு வந்து, சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது. அதற்கு முன், 2007-இல் முதல் உலகக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் வெற்றியை இழந்தது.
4 ஐசிசியின் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியிடம் இதுவரை 3 முறை தோற்றிருந்த நியூஸிலாந்து, தற்போது 4-ஆவது முறையாகவும் தோல்வியை சந்தித்திருக்கிறது. தகுதிவாய்ந்த அணியாக இருந்தாலும் கோப்பையைக் கைப்பற்ற முடியாத சோகம் அந்த அணிக்கு நீடிக்கிறது. கடந்த 2021 போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து வீழ்ந்த நியூஸிலாந்து, இம்முறை அரையிறுதியில் தோற்றிருக்கிறது.
உலக சாதனை
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பதிவு செய்தது, டி20 ஃபார்மட்டில் நியூஸிலாந்துக்கு எதிரான 18-ஆவது வெற்றியாகும். இந்த ஃபார்மட்டில் வேறெந்த அணியும் இத்தனை வெற்றிகளை ஒரே அணிக்கு எதிராகப் பதிவு செய்ததில்லை. முன்னதாக, இந்த ஃபார்மட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்தும், இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவும் 17 வெற்றிகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...