குல்தீப் அபாரம்: இந்தியா 100 ரன்கள் அடித்தால் தொடர் வெற்றி!

3-வது ஒருநாள் ஆட்டத்தில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.
குல்தீப் அபாரம்: இந்தியா 100 ரன்கள் அடித்தால் தொடர் வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.

ராஞ்சியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமன் ஆனது. 3-வது ஒருநாள் தில்லியில் இன்று நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் அறிமுகம் ஆகியுள்ளார். தெ.ஆ. அணியில் பவுமா, மஹாராஜ், ரபாடா ஆகியோர் இடம்பெறவில்லை. 

இந்திய அணியினர் சிறப்பாகப் பந்துவீசியதால் ஆரம்பம் முதல் தடுமாறியது தென்னாப்பிரிக்க அணி. 3-வது ஓவரில் வாஷிங்டனின் பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் டி காக். மலான் 15 ரன்களுக்கும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களுக்கும் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்கள். மார்க்ரம், ஷாபாஸ் அஹமது பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் மில்லரை 7 ரன்களுக்கு போல்ட் செய்தார் வாஷிங்டன் சுந்தர். இதனால் 19 ஓவர்களில் பாதி விக்கெட்டுகளை 66 ரன்களுக்கு இழந்து தவித்தது தென்னாப்பிரிக்க அணி. இதன்பிறகு அண்டிலே பெக்லுக்வாயோ 5 ரன்களில் குல்தீப் பந்தில் போல்ட் ஆனார்.

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துத் தடுமாறியது.

நன்கு விளையாடிய கிளாசென் 34 ரன்களில் ஷாபாஸ் அஹமது பந்தில் போல்ட் ஆனார். கடைசி மூன்று விக்கெட்டுகளையும் எடுத்த குல்தீப் யாதவ், இந்த ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி ஆறு விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தது தென்னாப்பிரிக்கா.

27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. குல்தீப் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன், சிராஜ், ஷாபாஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராகக் குறைந்த ரன்களை எடுத்துள்ளது தென்னாப்பிரிக்கா. அதற்கு முன்பு 1999-ல் நைரோபி, கென்யாவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com