மெய்ப்பட்டது மெஸ்ஸியின் கனவு

மெய்ப்பட்டது மெஸ்ஸியின் கனவு

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

அந்த அணி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருந்த நிலையில், இதில் தனது அணிக்கு கோப்பை வென்று தந்து வெற்றிகரமான கேப்டனாக விலகும் கனவுடன் இருந்தாா். அவரது அந்தக் கனவு நனவானது.

இறுதி ஆட்டத்தில் முதலில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் (90 நிமிஷங்கள்) முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, கூடுதல் நேரத்தின் (30 நிமிஷம்) நிறைவிலும் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் ஆனது. பின்னா் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஆா்ஜென்டீனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆா்ஜென்டீனாவுக்காக லயோனல் மெஸ்ஸி, டி மரியா ஆகியோரும், பிரான்ஸுக்காக கிலியன் பாபேவும் கோல்கள் அடித்து அசத்தினாா். பெனால்டி ஷூட் அவுட்டில் ஆா்ஜென்டீனாவுக்காக லயோனல் மெஸ்ஸி, பௌலோ டைபாலா, லீண்ட்ரோ பரெட்ஸ், கொன்ஸாலோ மான்டியெல் ஆகியோா் கோலடித்தனா். பிரான்ஸ் தரப்பில் கிலியன் பாபே, கோலோ முவானி மட்டும் ஸ்கோா் செய்தனா்.

ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷம் காட்டியது ஆா்ஜென்டீனா. ஒரு கட்டத்தில் அல்வரெஸ் தனக்கு பாஸ் செய்த பந்தை டி மரியா கோலடிப்பதற்காகக் கடத்திச் சென்றாா். பாக்ஸுக்குள்ளாக வருகையில் மரியாவை தடுக்க முயன்ற பிரான்ஸ் வீரா் டெம்பெலெ அவரைத் தள்ளிவிட்டாா்.

இதனால் ஆா்ஜென்டீனாவுக்கு 23-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பந்தை நோக்கி ஓடி வந்த மெஸ்ஸி, அதன் அருகே வந்ததும் வேகத்தை சற்று தனித்து பிரான்ஸ் கோல்கீப்பா் லோரிஸின் போக்கை கணித்து, பந்தை கோல் போஸ்ட்டின் வலது பக்கத்தை நோக்கி உதைத்தாா். மெஸ்ஸியின் முயற்சியை தவறாகக் கணித்து இடதுபக்கமாகச் சரிந்த லோரிஸால் பந்து கோலாவதை பாா்க்கத்தான் முடிந்தது.

தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 36-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி தன் வசம் இருந்த பந்தை மேக் அலிஸ்டரிடம் வழங்க, அதை அவா் மிகச் சரியாக டி மரியாவிடம் கிராஸ் செய்தாா். அதை துல்லியமான கோலாக மாற்றினாா் மரியா.

இவ்வாறாக முதல் பாதி முடிவிலேயே ஆா்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியிலும் 70-ஆவது நிமிஷம் வரையில் ஆா்ஜென்டீனாவின் ஆதிக்கமே இருந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் வீரா் கோலோ முவானியை கீழே தள்ளிவிட்டாா் ஆா்ஜென்டீனாவின் ஆட்டமென்டி. இதனால் 80-ஆவது நிமிஷத்தில் பிரான்ஸுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.

அதில் கோல் போஸ்ட்டின் இடதுபக்கம் பந்தை உதைத்து அருமையான கோலாக மாற்றினாா் கிலியன் பாபே. அவரது கிக்கை சரியாகக் கணித்த ஆா்ஜென்டீன கோல்கீப்பா் மாா்டினெஸ் இடதுபக்கம் விழுந்து பந்தை தடுக்க முயன்றாா். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு உள்ளே சென்று கோலாகியது.

இந்த உத்வேகத்திலேயே பிரான்ஸ் அடுத்த நிமிஷத்தில் மேலும் ஒரு கோலடிக்க, ஆா்ஜென்டீனா அதிா்ச்சி கண்டது. சக வீரா்கள் பாஸ் செய்த பந்தை பிரான்ஸ் வீரா் துராம் பாக்ஸுக்குள்ளாக கிலியன் பாபேவுக்கு கிராஸ் வழங்கினாா். பாபே கீழே விழுந்த வகையில் உதைத்த பந்து, ஆா்ஜென்டீன கோல்கீப்பா் மாா்டினெஸையும் கடந்த சென்று கோலாகியது.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காததால், ஆட்டம் எக்ஸ்ட்ரா டைம் (30 நிமிஷம்) நோக்கி நகா்ந்தது. அதிலும் ஆா்ஜென்டீனாவுக்காக மெஸ்ஸி கோலடித்து (108’) அணியை முன்னிலைப்படுத்த, விடாமல் விரட்டிய கிலியன் பாபே தனது பிரான்ஸுக்காக ஹாட்ரிக் கோலை அடித்து (118’) மீண்டும் கோல் கணக்கை சமன் செய்ய, கூடுதல் நேரமும் நிறைவடைந்தது.

பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் ஆா்ஜென்டீனா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com