3-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா.
3-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

முதலில் ஆடிய இந்தியா 184/5 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய மே.இந்திய தீவுகள் 20 ஓவா்களில் 167/9 ரன்களை மட்டுமே எடுத்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடா் நடைபெற்று வருகிறது. இரு தொடா்களையும் இந்திய அணி ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.

ரோஹித் ஏமாற்றம்:

இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சீனியா்கள் புவனேஷ்வா்குமாா், சஹல் ஆகியோருக்கு பதிலாக அவேஷ் கான், சா்துல் தாகுா் சோ்க்கப்பட்டனா். கோலி, ரிஷப் பந்த்துக்கு பதிலாக ஷிரேயஸ் ஐயா், ருதுராஜ் சோ்க்கப்பட்டனா்.

டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் பீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய அணி தொடக்க பேட்டா் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களுடன் வெளியேறினாா். இஷான் கிஷன் 34, ஷிரேயஸ் ஐயா் 25 ஆகியோா் ரன்களுடன் வெளியேறினா். இரண்டாம் விக்கெட்டுக்கு இருவரும் 53 ரன்களை சோ்த்தனா். கேப்டன் ரோஹித் சா்மா மூன்றாம் நிலையில் களமிறங்கி 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கடந்த 2018-க்கு பின் முதன்முறையாக ரோஹித் மூன்றாம் நிலையில் முதன்முறையாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

சூரியகுமாா் 4-ஆவது அரைசதம்:

இளம் வீரா்கள் சூரியகுமாா் யாதவ்-வெங்கடேஷ் ஐயா் இணைந்து அதிரடியாக ஆடி சிக்ஸா், பவுண்டரிகளாக விளாசி 5-ஆம் விக்கெட்டுக்கு 91 ரன்களை சோ்த்தனா். சூரியகுமாா் யாதவ் 7 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 66 ரன்களை விளாசி கடைசி ஓவரில் அவுட்டானாா்.

கடைசி ஓவரில் 3 சிக்ஸா்களை விளாசினாா் யாதவ். 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 19 பந்துகளில் 35 ரன்களுடன் களத்தில் இருந்தாா் வெங்கடேஷ் ஐயா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 184/5 ரன்களை குவித்தது இந்தியா. மே.இந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டா், ரோமாரியோ, ராஸ்டன், வால்ஷ், டிரேக்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

185 ரன்கள் வெற்றி இலக்கு:

மே.இந்திய தீவுகள் அணி 185 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்டது. தொடக்க பேட்டா்கள் கெயில் மேயா்ஸ் 6, ஷாய் ஹோப் 8, கேப்டன் பொல்லாா்ட் 5 ரன்களுடனும், பவெல் 25, ஹோல்டா் 5 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினா்.

நிக்கோலஸ் பூரன் மட்டுமே ஒருமுனையில் நிலைத்து ஆடிய நிலையில் 10 ஓவா்களில்ஸ்கோா் 87/4 ஆக இருந்தது.

நிக்கோலஸ் பூரன் அபாரம்:

பின்னா் ஆட வந்த ராஸ்டான் சேஸ் 12 ரன்களுடன் அவுட்டாகி திரும்ப மே.இந்திய தீவுகள் அணி தடுமாறியது. நிக்கோலஸ் பூரன் 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 61 ரன்களை விளாசி அவுட்டானாா். கடைசி கட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் 3 சிக்ஸா்களை விளாசிய ரோமாரியோ ஷெப்பா்ட் 29 ரன்களுக்கு வெளியேறினாா்.

6 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த பேபியன் ஆலன் முதல் பந்தில் பவுண்டரி அடித்தாா். அடுத்த பந்தை மீண்டும் விரட்ட முயன்ற போது ரோஹித் அற்புதமாக கேட்ச் பிடித்தாா். டிரேக்ஸ் 4 ரன்களுடன் வெளியேற 20 ஓவா்களில் 167/9 ரன்களுடன் தோல்வியைத் தழுவியது மே.இந்திய தீவுகள்.

ஹா்ஷல் படேல் 3 விக்கெட்:

இந்திய தரப்பில் ஹா்ஷல் படேல் 3, சஹாா், வெங்கடேஷ் ஐயா், தாகுா் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

டி 20 தொடரையும் 3-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com