கவாஸ்கரின் சாதனைக்கு அருகில் சென்ற நியூசிலாந்து வீரர்

5 டெஸ்டுகளில் 9 இன்னிங்ஸில் விளையாடி 3 சதங்கள், 2 அரை சதங்கள் எடுத்துள்ளார்.
கவாஸ்கரின் சாதனைக்கு அருகில் சென்ற நியூசிலாந்து வீரர்

முதல் ஐந்து டெஸ்டுகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் நியூசிலாந்து தொடக்க வீரர் டெவோன் கான்வே.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது வங்கதேச அணி. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது வங்கதேச அணி.

2-வது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் ஞாயிறன்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லேதம் இரட்டைச் சதமும் கான்வே சதமும் அடித்து அசத்தினார்கள். கான்வே 109 ரன்களிலும் டாம் லேதம் 252 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 

முதல் இன்னிங்ஸில் சதமடித்த கான்வே இதன்மூலம் சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

* 30 வயது கான்வே டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 டெஸ்டுகளில் 9 இன்னிங்ஸில் விளையாடி 3 சதங்கள், 2 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

* விளையாடிய முதல் 5 டெஸ்டுகளின் முதல் இன்னிங்ஸிலும் கான்வே 50+ ரன்களை எடுத்துள்ளார். இச்சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் கான்வே தான். அவருடைய முதல் இன்னிங்ஸ் ரன்கள்: 200, 80, 54, 122, 109. (ஆனால் அவருடைய 2-வது இன்னிங்ஸ் ரன்கள் சுமாராகவே உள்ளன. 23, 3, 19, 13.) இதற்கு முன்பு ஆறு வீரர்கள் முதல் 5 டெஸ்டுகளிலும் குறைந்தது ஒரு அரை சதமாவது எடுத்திருந்தார்கள். 

* முதல் 5 டெஸ்டுகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் கான்வே. கவாஸ்கர் 831 ரன்களும் ஜார்ஜ் ஹெட்லி 714 ரன்களும் எடுத்து முதல் இரு இடங்களில் உள்ளார்கள். கான்வே 623 ரன்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால் அவரால் கவாஸ்கரின் சாதனையைத் தாண்டுவது கடினம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com