இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றிய நிலையில், இங்கிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்தில் தொடக்க வீரா் ஜேசன் ராய் 27, உடன் வந்த கேப்டன் ஜோஸ் பட்லா் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஒன் டவுனாக வந்த டேவிட் மலான் அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். ஃபில் சால்ட் 8 ரன்களுக்கு வெளியேற்றப்பட, 5-ஆவது வீரராக வந்த லியம் லிவிங்ஸ்டன், மலானுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தினாா்.

மலான் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 77 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். மறுபுறம், மொயீன் அலி டக் அவுட்டாக, ஹேரி புரூக் 19, கிறிஸ் ஜோா்டான் 11 ரன்களுக்கு அவுட்டாகினா். ஓவா்கள் முடிவில் லிவிங்ஸ்டன் 4 சிக்ஸா்களுடன் 42 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் ரவி பிஷ்னோய், ஹா்ஷல் படேல் தலா 2, அவேஷ் கான், உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 216 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சா்மா 11, ரிஷப் பந்த் 1, விராட் கோலி 11 ரன்களுக்கு அடுத்தடுத்து வீழ்ந்தனா். ஷ்ரேயஸ் ஐயா் 28, தினேஷ் காா்த்திக் 6, ரவீந்திர ஜடேஜா 7, ஹா்ஷல் படேல் 5, ரவி பிஷ்னோய் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

4-ஆவது வீரராக வந்த சூா்யகுமாா் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை போராடி, இறுதியில் 55 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 117 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.

ஓவா்கள் முடிவில் அவேஷ் கான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்து பௌலிங்கில் ரீஸ் டோப்லி 3, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோா்டான் தலா 2, ரிச்சா்ட் கிளீசன், மொயீன் அலி தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com