எம்ஐ கேப் டவுன் அணியில் இணைந்த ஆர்ச்சர்!

எஸ்ஏ டி20 போட்டியில் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரைத் தேர்வு செய்துள்ளது எம்ஐ கேப் டவுன் அணி.
எம்ஐ கேப் டவுன் அணியில் இணைந்த ஆர்ச்சர்!

எஸ்ஏ டி20 போட்டியில் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரைத் தேர்வு செய்துள்ளது எம்ஐ கேப் டவுன் அணி.

2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் எஸ்ஏ டி20 என்கிற புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். தெ.ஆ. டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார். எஸ்ஏ டி20 போட்டி ஜனவரி 10 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெறவுள்ளது. 

தெ.ஆ. டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பர்க் அணியையும் மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் அணியையும் சன் டிவியின் சன் ரைசர்ஸ் - போர்ட் எலிசபெத் அணியையும் லக்னெள - டர்பன் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல் அணியையும் தில்லி கேபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜிண்டால் செளத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் - பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன. தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட்டாலும் அதிக தொகையை முன்வைத்து ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தெ.ஆ. டி20 லீக் போட்டியின் அணிகளைப் பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணி முதல்முறையாக வெளிநாட்டு லீக் போட்டியில் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது.  எம்.ஐ. கேப் டவுன், ஜோஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன் ஃபிரான்சைஸ், பார்ல் ராயல்ஸ், பிரிடோரியா கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் என ஆறு அணிகளும் பங்கேற்கின்றன. 

இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். அவர்களில் நான்கு வெளிநாட்டு வீரர்கள். ஒரு மாதம் வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 33 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

காயம் காரணமாக கிரிக்கெட்டில் சமீபமாக ஈடுபடாமல் இருக்கும் பிரபல இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர், எஸ்ஏ டி20 விளையாடவுள்ளார். அவரை எம்ஐ கேப் டவுன் அணி வைல்ட் கார்டு வழியாகத் தேர்வு செய்துள்ளது. 2021 மார்ச் மாதத்துக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஆர்ச்சர் விளையாடவில்லை. தற்போது அபு தாபியில் இங்கிலாந்து அணியின் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார். 

கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்ச்சரை ரூ. 8 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி. எனினும் 2022 ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடவில்லை. எஸ்ஏ டி20 போட்டிக்கான எம்ஐ கேப் டவுன் அணியில் ஆர்ச்சர், சாம் கரண், லிவிங்ஸ்டன், ஆலி ஸ்டோன், ரபாடா, பிரேவிஸ், ரஷித் கான் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com