அதிரடியாக விளையாடி சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத் கெளர்

ஆட்டமிழக்காமல் 143 ரன்கள் எடுத்து சாதனைகள் படைத்துள்ளார் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்.
அதிரடியாக விளையாடி சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத் கெளர்


இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 143 ரன்கள் எடுத்து சாதனைகள் படைத்துள்ளார் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர்.

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கேண்டர்பரியில் நடைபெற்றது. டி20 தொடரில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய மகளிர் அணி, ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்து அசத்தினார். மந்தனா 40 ரன்களும் ஹர்லீன் தியோல் 58 ரன்களும் எடுத்து உறுதுணையாக இருந்தார்கள். 

இங்கிலாந்து மகளிர் அணி, 44.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேனி வியாட் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 88 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தில் 1999-க்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 1999-க்குப் பிறகு இங்கிலாந்தில் விளையாடிய 6 ஒருநாள் தொடர்களிலும் இந்திய மகளிர் அணி தோற்றது. 

இந்த ஆட்டத்தில் சதமடித்த ஹர்மன்ப்ரீத் கெளர் நிகழ்த்திய சாதனைகள்:

* மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஹர்மன்ப்ரீத் கெளர். இதற்கு முன்பு மிதாலி ராஜ், இலங்கைக்கு எதிராக 2018-ல் 125* ரன்கள் எடுத்திருந்தார். 

* மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனைகளில் 3-வது இடம். இதற்கு முன்பு தீப்தி சர்மா 188 ரன்களும் ஹர்மன்ப்ரீத் கெளர் 171 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

* கடந்த 15 வருடங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற 2-வது அணி - இந்தியா. 2015, 2019-ல் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. கடந்த 15 வருடங்களில் சொந்த மண்ணில் விளையாடிய 20 ஒருநாள் தொடர்களில் 17-ல் இங்கிலாந்து வென்றுள்ளது. 

* இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - ஹர்மன்ப்ரீத்தின் 143* ரன்கள். இதற்கு முன்பு மூன்று வீராங்கனைகள் 117 ரன்கள் எடுத்துள்ளார்கள். 

* சதமடித்த பிறகு ஹர்மன்ப்ரீத்தின் ஸ்டிரைக் ரேட் - 390.91. சதமடித்த பிறகு எதிர்கொண்ட 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அடித்தார். 

* 5 ஒருநாள் சதங்கள் எடுத்துள்ளார் ஹர்மன்ப்ரீத் கெளர். மிதாலி 7 சதங்களும் மந்தனா 5 சதங்களும் எடுத்துள்ளார்கள். 

* 6-வது விக்கெட்டுக்கு ஹர்மன்ப்ரீத் கெளர் - தீப்தி சர்மா கூட்டணி எடுத்த ரன்கள், 71. ரன்ரேட் - 17.75. மகளிர் கிரிக்கெட்டில் 50 ரன்கள் எடுத்த கூட்டணியில் இதுவே அதிகபட்ச ரன்ரேட் (ஒவ்வொரு பந்தின் விவரங்கள் கிடைத்ததன் அடிப்படையில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com