பாலியல் குற்றச்சாட்டு: இந்திய மல்யுத்த சங்கத்திற்கு எதிராக வீரர்கள் போராட்டம்!

பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவாக இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டு: இந்திய மல்யுத்த சங்கத்திற்கு எதிராக வீரர்கள் போராட்டம்!

பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவாக இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி ஜந்தர் - மந்தர் பகுதியில் மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளை மாற்றக் கோரி ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து பஜ்ரங் புனியா கூறுகையில், “மல்யுத்த கூட்டமைப்புக்குள் தற்போதுள்ள சர்வாதிகார நிலையை மல்யுத்த வீரர்கள் பொறுத்துக்கொள்ள விரும்பவில்லை. வீரர்களை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு துன்புறுத்துகிறது. மல்யுத்த கூட்டமைப்பின் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தினரை உடனடியாக மாற்ற வேண்டும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறியதாவது, “டோக்கியோ ஒலிம்பிக்கில் தோற்ற பிறகு, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் என்னை அவதூறான வார்த்தை சொல்லி அழைக்கிறார். மனரீதியாக தொந்தரவு செய்கின்றனர். ஒருகட்டத்தில் நான் என் வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்தேன். மல்யுத்த வீரர்கள் யாருக்காவது எதாவது நேரிட்டால் அதற்கு மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் தான் பொறுப்பு.

பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். மேலும் கூட்டமைப்பிற்கு நெருங்கிய சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொள்கின்றனர். சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

மேலும், மல்யுத்த கூட்டமைப்பினர் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களுடன் மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளரைகூட அனுப்பவில்லை. இதற்கு எதிராக நாங்கள் கேள்வி கேட்டதால் எங்களை அச்சுறுத்தி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவுக் குரல் எழுப்பி வரும் நிலையில் மல்யுத்த சங்கத்திற்கு எதிராக வீரர்களின் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com