சரியான உணவு, உறக்கம் இல்லை: சாக்‌ஷி மாலிக் வேதனை

கடைசியாக எப்போது நன்றாக உணவருந்தினோம் என்று எனக்கு ஞாபகம் இல்லை.
சாக்‌ஷி மாலிக் (வலது)
சாக்‌ஷி மாலிக் (வலது)

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிரான போராட்டத்தினால் சரியான உணவு, உறக்கம் இல்லை என பிரபல மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் கூறியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்கள்.

டபிள்யுஎஃப்ஐ தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் புதன்கிழமை குற்றம்சாட்டினாா். பிரிஜ் பூஷணுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு மல்யுத்த சம்மேளனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் 3-வது நாளாகத் தொடரும் போராட்டம் பற்றி பிரபல மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தப் போராட்டம் எங்களை உடலளவிலும் மனத்தளவிலும் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். காலை 4 மணிக்குத் தூங்கி சீக்கிரமாக எழுந்து கொள்கிறோம். எங்களுக்குச் சரியான உணவோ உறக்கமே இல்லை. கடைசியாக எப்போது நன்றாக உணவருந்தினோம் என்று எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இந்தப் போராட்டம் மல்யுத்தத்துக்கு முக்கியமான ஒன்றாகும். எங்களுடைய கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுங்கள் என்று பிரதமரிடமும் மத்திய உள்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கிறோம். அப்போதுதான் எங்களால் அடுத்து வருகிற போட்டிகளுக்கான பயிற்சியை மீண்டும் தொடங்க முடியும். எங்களுடைய பயிற்சியை நிறுத்திவிட்டு, இப்படிச் சாலையில் போராடுவது வேதனைக்குரியது. இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டு மல்யுத்தம் தெரிந்தவர்களைக் கொண்ட நிர்வாகக் குழு உருவாக்கப்பட வேண்டும். எங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்கிறார்கள் என்றார். 

சாக்‌ஷி மாலிக், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com