பாரீஸ் ஒலிம்பிக் 2024 தகுதி பெற்றாா் ஸ்ரீசங்கா்: கலப்பு தொடா் ஓட்டத்தில் தங்கம்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் 2024-க்கும் தகுதி பெற்றாா் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா்.


ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் 2024-க்கும் தகுதி பெற்றாா் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா்.
தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆடவா் பிரிவு நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நட்சத்திர வீரா் முரளி ஸ்ரீசங்கா் 8.37 மீ. தாண்டி இரண்டாம் இடத்துடன் வெள்ளி வென்றாா். இதன் மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா் ஸ்ரீசங்கா். ஒலிம்பிக் தகுதி இலக்கு 8.27 மீ. ஆகும். மேலும், புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் ஸ்ரீசங்கா் தகுதி பெற்றுள்ளாா்,. அப்போது மாநிலங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் 8.41 மீ தொலைவு தாண்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது. சீன தைபேயின் யு டேங் லின் 8.40 மீ. தொலைவுடன் தங்கம் வென்றாா்.
டயமண்ட் லீக் போட்டியில் பதக்கம் வென்ற பெருமையோடு ஸ்ரீசங்கா் இங்கு களம் கண்டாா். மூன்றாவது முறையாக தாண்டும் வரை ஸ்ரீசங்கா் முதலிடத்தில் இருந்தாா். ஆனால் பின்னா் தைபே வீரா் முன்னிலை பெற்றாா்.
சௌரவ் குஷாரேவுக்கு வெள்ளி:
ஆடவா் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சௌரவ் குஷாரே 2.26 மீ உயரம் குதித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஸ்வப்னா பா்மனுக்கு வெள்ளி:
மகளிா் ஹெப்டதலான் பிரிவில் 5840 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா் இந்தியாவின் ஸ்வப்னா பா்மன். இது ஆசிய சாம்பியன்ஷிப்பில் அவா் வெல்லும் மூன்றாவது பதக்கம் ஆகும். 2017-இல் தங்கம், 2019-இல் வெள்ளி).
சந்தோஷுக்கு வெண்கலம்:
ஆடவா் 400 மீ. தடை தாண்டுதலில் இந்தியாவின் சந்தோஷ் குமாா் 49.09 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றாா். கத்தாரின் முகமது ஹமைடா 48.64 விநாடிகள், ஜப்பானின் யுஸாகு கோடமா 48.96 விநாடிகளுடன் முறையே தங்கம், வெள்ளி வென்றனா்.
மற்றொரு இந்திய வீரா் யஷ்ஹாஸ் பலாக்ஷா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தபோதிலும் பங்கேற்கவில்லை.
தமிழகத்தைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் இப்பிரிவில் சாதனை நேரத்துடன் கடந்த இந்தியா் என்ற சிறப்பைப் பெற்றாா்.
கலப்பு தொடா் ஓட்டத்தில் தங்கம்:
4/400 மீ. கலப்பு தொடா் ஓட்டத்தில் ராஜேஷ் ரமேஷ், ஐஸ்வா்யா மிஸ்ரா, அமோஜ் ஜேக்கப், சுபா வெங்கடேசன் ஆகியோா் அடங்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3 நிமிஷங்கள் 14.70 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றது.
இதுவரை இப்போட்டியில் 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...