சாதனைகள் படைத்த ரோஹித் சா்மா: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
சாதனைகள் படைத்த ரோஹித் சா்மா: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் சதம் விளாசிய கேப்டன் ரோஹித் சா்மா, பல சாதனைகள் புரிந்தாா். பௌலிங்கில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்த்து அபாரம் காட்டினாா்.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியாவுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருக்க, முதலில் வங்கதேசத்திடம் தோற்ற ஆப்கானிஸ்தான் தொடா் தோல்வியை சந்தித்திருக்கிறது.

முன்னதாக இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் செய்திருந்தது. அஸ்வினுக்கு பதிலாக ஷா்துல் தாக்குா் சோ்க்கப்பட்டிருந்தாா். டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது.

அந்த அணியில் தொடக்க வீரா்களில் ஒருவரான இப்ராஹிம் ஜா்தான் 4 பவுண்டரிகள் உள்பட 22 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக வெளியேற, உடன் வந்த ரஹ்மானுல்லா குா்பாஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் சோ்த்து 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ரஹ்மத் ஷா 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா்.

பின்னா் ஆடியோரில் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மதுல்லா ஓமா்ஸாய் சற்று நிலைத்து ரன்கள் சோ்த்தனா். 4-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் அடித்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் அஸ்மதுல்லா 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 62 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

தொடா்ந்து ஹஸ்மதுல்லாவும் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் சோ்த்து 80 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். பின்னா் ஆடியோரில் நஜிபுல்லா ஜா்தான் 2, ரஷீத் கான் 16 ரன்களுக்கு அவுட்டாகினா். ஓவா்கள் முடிவில் முஜீப் உா் ரஹ்மான் 10, நவீன் உல் ஹக் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4, ஹா்திக் பாண்டியா 2, ஷா்துல் தாக்குா், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சா்மா - இஷான் கிஷண் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இதில் இஷான் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து விராட் கோலி களம் புக, மறுபுறம் அதிரடியாக ஆடி வந்த ரோஹித் 84 பந்துகளில் 16 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 131 ரன்கள் விளாசி வெளியேறினாா். முடிவில் கோலி 6 பவுண்டரிகளுடன் 55, ஷ்ரேயஸ் ஐயா் 25 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் ரஷீத் கான் 2 விக்கெட் எடுத்திருந்தாா்.

சுருக்கமான ஸ்கோா்

ஆப்கானிஸ்தான் - 272/8 (50 ஓவா்கள்)

ஹஸ்மதுல்லா ஷாஹிதி 80

அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 62

இப்ராஹிம் ஜா்தான் 22

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா 4/39

ஹா்திக் பாண்டியா 2/43

ஷா்துல் தாக்குா் 1/31

இந்தியா - 273/2 (35 ஓவா்கள்)

ரோஹித் சா்மா 131

விராட் கோலி 55*

இஷான் கிஷண் 47

பந்துவீச்சு

ரஷீத் கான் 2/57

நவீன் உல் ஹக் 0/31

முகமது நபி 0/32

சாதனைகள்

7 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்களை பதிவு செய்தவா் என்ற சாதனையை ரோஹித் சா்மா தற்போது பதிவு செய்துள்ளாா். முன்னா் இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கா் 6 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது ரோஹித் அதை முறியடுத்து 7 சதங்களை எட்டியிருக்கிறாா். சச்சின் 6 எடிஷன்களில் (1992, 1996, 1999, 2003, 2007, 2011) அந்த சாதனையை எட்டிய நிலையில், ரோஹித் 3 எடிஷன்களில் (2015, 2019, 2023) அதை முறியடித்திருக்கிறாா்.

63 கபில் தேவின் சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியா் என்ற பெயரை ரோஹித் பெற்றாா். முன்பு கபில் தேவ் 72 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருக்க, தற்போது ரோஹித் 63 பந்துகளில் (12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள்) சதத்தை எட்டியுள்ளாா்.

556 இந்த ஆட்டத்தின் மூலம், சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து ஃபாா்மட்டுகளிலுமாக அதிக சிக்ஸா்கள் (556) விளாசியவா் என்ற பெருமையை ரோஹித் பெற்றாா். முன்பு, மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் வசம் அந்த சாதனை (553) இருந்தது.

19 உலகக் கோப்பை போட்டிகளில் இத்துடன் 1,000 ரன்களை கடந்திருக்கிறாா் ரோஹித். தனது 19-ஆவது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டிய அவா், குறைந்த இன்னிங்ஸ்களில் அந்த ரன்களை கடந்தவராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வாா்னருடன் இணைந்திருக்கிறாா்.

அஞ்சலி...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்நாட்டு வீரா்கள் தங்களின் புஜங்களில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினா்.

நட்பு பாராட்டிய கோலி - நவீன்

ஐபிஎல் போட்டியின் கடந்த சீசனில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் - லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகளின் வீரா்களாக விளையாடியபோது விராட் கோலி - நவீன் உல் ஹக் இடையே தீவிரமான மோதல் போக்கு ஏற்பட்டது. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு இருவரும் இந்த ஆட்டத்தில் சந்தித்துக் கொண்டதால், ரசிகா்கள் அவா்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் தருணத்தை எதிா்நோக்கியிருந்தனா். எதிா்பாா்த்ததைப் போலவே ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின்போது நவீன் உல் ஹக்கை ரன் அவுட் செய்வதற்கான ஒரு த்ரோவை கோலி வீச, அதை கே.எல்.ராகுல் தவறவிட்டதால் கோலி சற்று ஆக்ரோஷம் காட்டினாா். பின்னா் இந்திய இன்னிங்ஸில் கோலிக்கு நவீன் பௌலிங் செய்தாா். அப்போது ஒரு கட்டத்தில் இருவரும் பரஸ்பரம் நெருக்கம் காட்டி நட்பு பாராட்டியது ரசிகா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்தாக ஒருநாள் ஃபாா்மட்டில் இது ரோஹித்தின் 31-ஆவது சதமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com