/

இரட்டை சதத்தை தவறவிட்ட கோலி: டிராவை நோக்கி நகரும் கடைசி டெஸ்ட்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. 

News image
Updated On :12 மார்ச் 2023, 12:53 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 571 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்திருந்தது. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலியுடன் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி டெஸ்டில் தனது 28-வது சதத்தினை அடித்து அசத்தினார். அவர் 241 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். அனைத்து வடிவிலான போட்டிகளில் விராட் கோலியின் 75-வது சதம் இதுவாகும். மறுபுறம் ஸ்ரீகர் பரத் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அக்சர் படேல் களம் கண்டார். கோலி-அக்சர் ஜோடி வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. இருப்பினும் அக்சர் படல் 79 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த அஷ்வின் 7 ரன்களிலும், உமேஷ் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 186 ரன்கள் எடுத்திருந்தபோது மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். இறுதியில் இந்திய அணி 178.5 ஓவர்களில் 571 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் கோலி 186, கில் 128 எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதுகு வலி காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்யவில்லை.

91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 4ஆம் நாள் ஆட்டம் நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது. டிராவஸ் ஹெட் 3, குனேமன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். நாளை ஒருநாள் மட்டும் எஞ்சியிருக்கும் நிலையில் இரண்டு அணிகளும் 2ஆவது இன்னிங்சை ஆட வேண்டி இருப்பதால் 4-ஆவது மற்றும கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.