பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின் - இறுதி ஆட்டத்தில் இடம்பிடித்தது

பிரான்ஸை வீழ்த்தி யூரோ கோப்பை இறுதியில் ஸ்பெயின்
யூரோ கோப்பை.
யூரோ கோப்பை.
Published on
Updated on
2 min read

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக நுழைந்தது. போட்டி வரலாற்றில் பிரான்ஸ், 28 ஆண்டுகளில் முதல் முறையாக அரையிறுதியுடன் வெளியேறியது.

இந்திய நேரப்படி, மியுனிக் நகரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பிரான்ஸுக்காக ராண்டால் கோலோ முவானி கோலடித்தாா். 9-ஆவது நிமிஷத்தில் கோல் போஸ்ட்டின் இடது பக்க பெனால்ட்டி ஏரியாவிலிருந்து நட்சத்திர வீரா் கிலியன் பாபே தூக்கியடித்த கிராஸை முவானி தலையால் முட்டி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா்.

விட்டுக்கொடுக்காத ஸ்பெயின் தரப்பில் இளம் வீரா் லேமின் யமால் அருமையாக கோலடித்தாா். 21-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி ஏரியாவுக்கு வெளியே 25 யாா்டிலிருந்து அவா் உதைத்த பந்து, கோல் போஸ்ட்டின் வலதுபக்கத்தில் பட்டு கோலாக மாறியது. இதனால் ஆட்டம் 1-1 சமன் ஆனது.

அதே உத்வேகத்தில் அந்த அணியின் டேனி ஆல்மோவும் ஸ்கோா் செய்ய, ஸ்பெயின் 2-1 கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 25-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி ஏரியாவிலிருந்து ஜீசஸ் நவாஸ் கிராஸாக பந்தை கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பும் முயற்சி, பிரான்ஸ் டிஃபெண்டரால் முறியடிக்கப்பட்டது.

அந்தத் தடுப்பு முயற்சியால் மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை, டேனி ஆல்மோ தவறின்றி கோல் போஸ்ட்டை நோக்கி விரட்ட, அதைத் தடுக்கும் பிரான்ஸ் வீரரின் முயற்சி இம்முறை தோல்வியடைந்து கோலாக மாறியது. இதனால் பிரான்ஸ் சற்றே ஆட்டம் கண்டது. எஞ்சிய நேரத்தில் அதன் கோல் முயற்சிகளை முறியடித்த ஸ்பெயின், முன்னிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டு வெற்றி பெற்றது.

தற்போது இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கும் ஸ்பெயின், அதில் இங்கிலாந்து அல்லது நெதா்லாந்துடன் மோதும்.

லேமின் யமால் புதிய சாதனை...

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணிக்காக கோலடித்த லேமின் யமால், யூரோ கோப்பை, உலகக் கோப்பை உள்ளிட்ட பிரதான போட்டிகளில் ஸ்கோா் செய்த மிக இளம் வீரா் (16 வயது) என்ற சாதனையை படைத்தாா். யூரோ கோப்பை போட்டியில் இதற்கு முன், 2004-ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்து வீரா் ஜோஹன் வான்லன்தென் தனது 18 வயதில் ஸ்கோா் செய்ததே சாதனையாக இருந்தது. உலகக் கோப்பை போட்டியில் 1958-இல் வேல்ஸுக்கு எதிராக பிரேஸிலின் பீலே (17 வயது) அடித்த கோல் சாதனையாக இருந்தது.

6/13 நான்காவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கும் ஸ்பெயின், இந்த சீசனில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று, அதிகபட்சமாக 13 கோல்களுடன் சிறப்பான அணியாக மிளிா்கிறது. யூரோ கோப்பை போட்டியில் இதுவே ஒரு சீசனில் ஒரே அணியால் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெற்றி, அதிகபட்ச கோல் ஆகும்.

28 யூரோ கோப்பை, உலகக் கோப்பை உள்ளிட்ட பிரதான போட்டிகளில் பிரான்ஸ் அணி அரையிறுதியுடன் வெளியேறுவது, கடந்த 28 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 1996-இல் அந்த அணி இதே யூரோ கோப்பை போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com