பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற ஐஐடி பட்டதாரி: யார் இந்த நிதேஷ் குமார்?

சிறு வயதிலேயே காலை இழந்த நிதேஷ் குமார் விளையாட்டில் புரிந்த சாதனைகள் பற்றி...
நிதேஷ் குமார்
நிதேஷ் குமார்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

பாரீஸ் நகரில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் தொடரில் பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் (10 மீட்டர்) அவனி லெகாராவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத்தந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு பாராலிம்பிக்கில் இதுவரை 2 தங்கம் கிடைத்துள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த டேனியல் பெத்தேலை வீழ்த்தி, நிதேஷ் பதக்கம் வென்றுள்ளார்.

பாராலின்பிக் தொடரில் கீழ் மூட்டு குறைபாடு உடையோர் பயன்படுத்தும் வகையில் எஸ்.எல், 3 பிரிவில் இவர் பங்கேற்றார். இதன்மூலம் பாட்மின்டன் திடலில் அரைப்பகுதி அகலத்தை மட்டுமே பயன்படுத்தி விளையாடலாம்.

ஐஐடி பட்டதாரியான நிதேஷ் குமார் தங்கம் வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியாவை மேலும் உயர்த்தியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நிதேஷ் குமார்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நிதேஷ் குமார்இன்ஸ்டாகிராம்

யார் இந்த நிதேஷ் குமார்

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார். தற்போது ஹரியாணா மாநிலத்துக்கான சீனியர் பாட்மின்டன் பயிற்சியாளராக உள்ளார்.

தனது பதின்ம வயதில் ஏற்பட்ட விபத்தால், இளமைக்கால இயல்பு வாழ்க்கை முற்றிலும் மாறியது. 2009ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் காலை இழந்தார் நிதேஷ் குமார்.

கால்பந்தாட்டத்தில் மிகவும் நாட்டம் கொண்ட நிதேஷ், விபத்துக்குப் பிறகு விளையாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் நுழைவுத் தேர்வு எழுதி தேர்வானார். 2013-ல் ஐஐடியில் சேர்ந்தார். அங்கு முதலாமாண்டை நிறைவு செய்யும்போது மீண்டும் விளையாட்டில் நிதேஷுக்கு நாட்டம் வந்தது.

பாட்மின்டனில் தன்னுடைய ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். 2016-ல் பாரா பாட்மின்டன் விளையாட்டு வீரராக நிதேஷின் வாழ்க்கை தொடங்கியது. தேசிய பாரா சாம்பியன்ஷிப் தொடரில் ஹரியாணா அணிக்காக விளையாடினார். அதுவே அவரின் முதல் தேசிய அளவிலான போட்டி.

2017-ல் ஐரிஷ் சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் தனது முதல் சர்வதேச பதக்கத்தை நிதேஷ் வென்றார். அதனைத் தொடர்ந்து முழுநேரமாக பயிற்சி மேற்கொண்ட அவர், பாட்மின்டன் உலகக் கூட்டமைப்பு நடத்திய பாரா பாட்மின்டன், ஆசிய பாரா பாட்மின்டன் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

2024 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நிதேஷ் குமார்
2024 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நிதேஷ் குமார்இன்ஸ்டாகிராம்

தனது விளையாட்டு பயணம் தொடங்கியது குறித்து நிதேஷ் குமார் பேசியதாவது,

''எனது குழந்தைப் பருவம் சற்று வித்தியாசமானது. நான் தினமும் கால்பந்து விளையாடுவேன். பின்னர் விபத்தில் சிக்கி என் காலை இழந்தேன். நிரந்தரமாக விளையாட்டிலிருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்தினேன். பின்னர் மீண்டும் விளையாட்டு என் வாழ்க்கையில் நுழைந்தது.

பிரமோத், விராட் கோலி ரசிகன்

ஐஐடியில் படிக்கும்போது பாட்மின்டனில் எனக்கு நாட்டம் ஏற்பட்டது. பாரா பாட்மின்டன் விரரான பிரமோத் பாகத் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோரின் கடும் உழைப்பால் ஈர்க்கப்பட்டு மீண்டும் விளையாட்டிற்குள் அடியெடுத்துவைத்தேன்.

பிரமோத் பாகத் தனது விளையாட்டுத் திறமையால் மட்டும் என்னை ஈர்க்கவில்லை, பணிவான மனிதராகவும் அவரால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். உடலைக் கட்டுக்கோப்பாகவும் மனதை ஒழுக்கமாகவும் வைத்துக்கொள்வதை விராட் கோலியிடம் கற்றுக்கொண்டேன்.

2022 ஆசிய பாராலிம்பிக் போட்டியில் நிதேஷ் பெற்ற பதக்கங்கள்
2022 ஆசிய பாராலிம்பிக் போட்டியில் நிதேஷ் பெற்ற பதக்கங்கள்இன்ஸ்டாகிராம்

எனது தந்தை கடற்படையில் பணியாற்றினார். அவரை சீருடையில் பார்த்து வளர்ந்த நானும் சீருடை அணிந்து பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விபத்து என் ஆசையை அழித்துவிட்டது.

ஆனால், புணேவில் உள்ள செயற்கை மூட்டு மையத்திற்கு சென்றது, என் எண்ணங்களை முற்றிலும் மாற்றியது. ராணுவத்தைச் சேர்ந்த கால்களை இழந்த பல வீரர்களை அங்கு கண்டேன்.

40 - 50 வயதுடைய நபர்கள் கூட கால்பந்து விளையாடுகின்றனர். சைக்கிளிங் மற்றும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கின்றனர். இந்த வயதில் அவர்களால் அதை செய்ய முடிகிறது என்றால், என்னாலும் என் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்தது.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய பாட்மின்டன் வீரர் பிரமோத் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போது நானும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவு தற்போது நனவாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com