பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் கோலாகலமாக நடைபெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகள் அண்மையில் நிறைவடைந்தன. பாராலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா கடந்த பாராலிம்பிக் போட்டிகளைக் காட்டிலும் அதிக அளவிலான பதக்கங்களை வென்று குவித்தது. 29 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 18-வது இடம் பிடித்தது.
இந்த நிலையில், பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகை அறிவிப்பு
பாராலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பரிசுத் தொகையினை அறிவித்தார்.
தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
பாராலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களை பாராட்டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பாராலிம்பிக் மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் நாடு முன்னேறி வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் 4 பதக்கங்கள் வென்றோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் 19 பதக்கங்களை வென்றிருந்தோம். இந்த முறை பாரீஸ் பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்துள்ளோம்.
நமது பாராலிம்பிக் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் செய்துதர முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக அளவிலான பதக்கங்களை வெல்லும் என்றார்.
50 பதக்கங்கள்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்றுள்ளது. பாராலிம்பிக் போட்டி ஒன்றில் இந்தியா வெல்லும் அதிகபட்ச பதக்கங்கள் இதுவாகும். அதேபோல, பாராலிம்பிக் வரலாற்றில் 50 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.