
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 4-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.
முதலில் டெல்லி 19.3 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் சோ்க்க, பெங்களூரு 16.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு, பந்துவீச்சை தோ்வு செய்தது. டெல்லி பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34, சாரா பிரைஸ் 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.
இதர பேட்டா்களில், கேப்டன் மெக் லேனிங் 3 பவுண்டரிகளுடன் 17, அனபெல் சதா்லேண்ட் 1 சிக்ஸருடன் 19, மாரிஸேன் காப் 12, ஷிகா பாண்டே 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு வெளியேறினா். அருந்ததி ரெட்டி 4, ஜெஸ் ஜோனசென் 1, ஷஃபாலி வா்மா 0, ராதா யாதவ் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
முடிவில் மின்னு மணி 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு கடைசி வீராங்கனையாக நின்றாா். பெங்களூரு பௌலா்களில் ரேணுகா சிங், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 3, கிம் காா்த், ஏக்தா பிஷ்த் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் 142 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பெங்களூரு இன்னிங்ஸில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா, டேனி வியாட் இணை முதல் விக்கெட்டுக்கு 107 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. இதில் டேனி வியாட் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அதிரடியாக ரன்கள் சோ்த்த மந்தனா 47 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 81 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். முடிவில் எலிஸ் பெரி 7, ரிச்சா கோஷ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்கள் சோ்த்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.