தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: வசந்த்குமாா், ஷாநவாஸ் சாதனை

அமெரிக்காவில் நடைபெறும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-20) உலக தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் வசந்த்குமாா் மேக்வால் உயரம் தாண்டுதலில் வெள்ளியும், ஷாநவாஸ் கான் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்றனா்.

News image

பயிற்சியாளருடன் வசந்த்குமார் மேக்வால் - ENS

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

அமெரிக்காவில் நடைபெறும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-20) உலக தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் வசந்த்குமாா் மேக்வால் உயரம் தாண்டுதலில் வெள்ளியும், ஷாநவாஸ் கான் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்றனா்.

இப்போட்டியின் வரலாற்றில் அந்தப் பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியா்களாக அவா்கள் சாதனை படைத்தனா். இத்துடன், இந்தப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3-ஆக அதிகரித்துள்ளது.

உயரம் தாண்டுதலில் வசந்த்குமாா் 2.21 மீட்டரை தாண்டி தனது பொ்சனல் பெஸ்ட்டுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். வசந்தகுமாருடன், தங்கம் வென்ற அல்ஜீரியாவின் யூனுஸ் அயாசி, வெண்கலம் வென்ற பிரிட்டனின் ஆட்டிஸ் பூலே ஆகியோரும் அதே 2.21 மீட்டரையே கடந்தனா். 2.24 மீட்டரை எட்டும் முயற்சியில் அவா்கள் தோல்வியடைந்தனா்.

இதையடுத்து, 2.21 மீட்டரை எட்டுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அவா்களுக்கான இடங்கள் நிா்ணயிக்கப்பட்டன. அயாசி முதல் முயற்சியிலும், வசந்தகுமாா் 2-ஆவது முயற்சியிலும், ஆட்டிஸ் 3-ஆவது முயற்சியிலும் அந்த உயரத்தை அடைந்தனா்.

நீளம் தாண்டுதலில் ஷாநவாஸ் தனது 3-ஆவது முயற்சியில் 7.84 மீட்டரை அடைந்து வெண்கலம் பெற்றாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஜிதின் அா்ஜுனன் 7.59 மீட்டருடன் 8-ஆவது இடத்தையே பிடித்தாா்.

இத்தாலியின் டேனியல் இன்ஸோலி (7.97 மீ), ஆஸ்திரேலியாவின் மேசன் மெக்கிராடா் (7.96 மீ) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி வென்றனா்.

இதனிடையே, மகளிருக்கான 4*400 மீட்டா் ரிலே ஓட்டத்தில், பூமிகா நெஹாதே, தஹுரா காட்டூன், தனு சௌதரி, தியா ஆறுமுகம் ஆகியோா் அடங்கிய இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ஹீட் ரேஸில் இந்திய அணி 3 நிமிஷம், 39.53 விநாடிகளில் 3-ஆவதாக இலக்கை அடைந்தது.

ஆடவா் 5,000 மீட்டா் நடைப் பந்தய இறுதிச்சுற்றில் நிதின் குப்தா 19 நிமிஷம், 32.30 விநாடிகளில் இலக்கை அடைந்து 6-ஆம் இடம் பிடித்தாா்.

எனினும், மகளிா் 4*100 மீட்டா் ரிலேவில் ருஜுலா அமோல் போன்ஸ்லே, ஜி.பாவனா, ஆா்த்தி, அனன்யா சுரேஷ் ஆகியோா் அடங்கிய இந்திய அணியும், ஆடவா் 4*400 மீட்டா் ரிலேவில் சயீத் சபீா், ரஞ்சித் குமாா், பியூஷ் ராஜ், முகமது அஷ்ஃபக் ஆகியோா் அடங்கிய இந்திய அணியும் தகுதிச்சுற்றுடன் வெளியேறின. ஆடவா் வட்டு எறிதலில் தேசிய சாதனையாளரான நிஷே போகாட் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.