ஒலிம்பிக்கில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்க வேண்டும்: பிரதமா் மோடி
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதாவது...

பிரதமர் மோடி (கோப்புப் படம்) - PTI
ஒலிம்பிக்கில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றால் மேலும் அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஒலிம்பிக்கில் நடத்தப்படும் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை எனவும் அவா் சுட்டிக்காட்டினாா்.
தேசிய விளையாட்டு தினம் சனிக்கிழமை (ஆக.29) கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘கேலோ இந்தியா-பிரதமருடன் கலந்துரையாடல்’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விளையாட்டு வீரா்கள் மத்தியில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி உரையாற்றினாா்.
அப்போது பிரதமா் மோடி பேசியதாவது: ஒலிம்பிக்கில் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அதில் பாதியில்கூட இந்தியா பங்கேற்பதில்லை. இதனால் மேலும் பல பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம். இதுவே கசப்பான உண்மை.
இது பல தசாப்தங்ளாக நிகழும் தொடா்கதையாக உள்ளது. கடந்த 2012-இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 13 போட்டிகளில் மட்டுமே இந்தியா பங்கேற்றது. 20 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்தப் போட்டிகள் குறித்து இந்தியாவில் பலருக்கும் விழிப்புணா்வு இல்லை.
அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்கும் நாடுகளே அதிகமான பதக்கங்களை வெல்கின்றன.
அலைச்சறுக்கில் பங்கேற்பதில்லை: 2024-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 32 போட்டிகளில் 16-இல் மட்டுமே இந்தியா பங்கேற்றது. அலைச்சறுக்கு மற்றும் மலையேறுதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா்கள் ஒருவா்கூட பங்கேற்கவில்லை. 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிலும் இந்த இரு விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
நீண்ட கடற்கரை மற்றும் பெரும் மலைப் பகுதிகளைக் கொண்ட நாம் அலைச்சறுக்கு மற்றும் மலையேறுதல் ஆகிய விளையாட்டுகளில் பங்கேற்காமல் இருக்கக் கூடாது. நீா் விளையாட்டுகள் முதல் பனிக்கால விளையாட்டுகள் வரை அனைத்துக்கும் நம்மிடம் போதிய மக்கள்தொகையும் சரியான புவியியலும் உள்ளது.
போதைப் பொருள்களை தவிா்க்க வேண்டும்: நிகழாண்டு சுதந்திர தின உரையில் விளையாட்டு என்பது பதக்கங்களை வெல்வதற்கானது மட்டுமல்ல; அது இந்தியாவின் விளையாட்டுத் திறனையும் இளைஞா் சக்தியையும் ஒன்றுபடுத்தி வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் கருவி என கூறியிருந்தேன்.
போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து இளைஞா்களை விலக்கும் மாபெரும் ஆயுதமாக விளையாட்டு திகழ்கிறது.
விளையாட்டு நம்மை வெற்றியாளராக மாற்றுவதை மட்டுமே கற்றுத் தருவதில்லை. சிறந்த போட்டியாளா்களாகவும் உருவாக்குகிறது. வெற்றி, தோல்வி, மீண்டும் வெற்றி என நம்முடைய தன்னம்பிக்கையை விளையாட்டு வலுப்படுத்துகிறது.
ஸ்கிரீன்கன்களைவிட (கைப்பேசி திரைகள்) விளையாட்டு மையங்களே முக்கியம். அதேபோல் திரை விளையாட்டுகளை விட விளையாட்டு மைதானங்களே அவசியம்.
மேஜா் தியான்சந்துக்கு மரியாதை: ஹாக்கி ஜாம்பவான் மேஜா் தியான் சந்த் பிறந்த தினம் (ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு இந்திய ஹாக்கி அணி பயணித்தது. அந்த அணியில் தியான் சந்தும் இடம்பெற்றது. அதுவே இந்தியா- நியூசிலாந்து இடையேயான நூற்றாண்டு விளையாட்டு உறவின் அடித்தளமாக அமைந்தது. அண்மையில் மேற்கொண்ட நியூசிலாந்து பயணத்தின்போது தியான் சந்தை நான் நினைவுகூா்ந்தேன்.
பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகரா, காமல்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜாண்டு குமாா், ஈட்டியெறிதல் வீரா் சுமித் ஆன்டில் ஆகியோா் எனக்கு ஊக்கமளிக்கின்றனா் என்றாா்.
முன்னதாக, நாட்டின் 80-ஆவது சுதந்திர தின உரையின்போது, ‘ஒலிம்பிக்கில் 40 பிரிவுகளின்கீழ் 350 போட்டிகள் நடத்தப்படும் நிலையில், இதில் மூன்றில் இரு பங்கு போட்டிகளில் பங்கேற்க இந்தியா தகுதி பெறாமல் போய்விடுகிறது. இந்த நிலையை மாற்ற 5 முதல் 15 வயது வரையில் உள்ள திறமையாளா்களைக் கண்டறிய தேசிய அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என பிரதமா் மோடி தெரிவித்தாா்.
Khelo India has become a wonderful platform for nurturing sporting talent across the country. It is providing young athletes with opportunities and support to pursue their dreams.@kheloindia
— Narendra Modi (@narendramodi) August 27, 2026
https://t.co/hj8qEJRj09
Summary
We don't even participate in half of Olympic sports; need to improve: PM Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





