இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் இங்கிலாந்து 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 45.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 262 ரன்கள் சேர்த்து வென்றது. ஆல்-ரவுண்டராக அசத்திய அக்ஸர் படேல், ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்துடனான டி20 தொடரில் ஒரு வெற்றி கூட காணாத இந்திய அணி, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய பென் டக்கெட் - ஜேக்கப் பெத்தெல் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்து நல்லதொரு தொடக்கம் அளித்தது.
ஆனால், அடுத்த 19 ரன்களில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கண்டது. ஒன் டவுனாக வந்த ஜோ ரூட் நிதானத்தை கடைபிடிக்க, பெத்தெல் 1 பவுண்டரியுடன் 14, பென் டக்கெட் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 43 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர்.
தொடர்ந்து வந்த கேப்டன் ஹேரி புரூக் 1, ஜாஸ் பட்லர் 5, சாம் கரன் 0 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர்.
7-ஆவது பேட்டராக வந்த வில் ஜாக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வீழ, 8-ஆவது வீரராக களம் புகுந்தார் லியம் டாசன். ஜோ ரூட்டுடனான அவரின் கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து, இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டது.
7-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அக்ஸர் படேல் பிரித்தார். 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68 ரன்களுக்கு லியம் டாசன் வீழ்ந்தார். தொடர்ந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12, ஆதில் ரஷீத் 1, ஜாஷ் டங் 0 ரன்களுக்கு, அக்ஸர் படேலால் சாய்க்கப்பட்டனர்.
முடிவில், ஜோ ரூட் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 76 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பெüலர்களில் அக்ஸர் படேல் 4 விக்கெட்டுகள் சாய்க்க, பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோர் தலா 2, ஜஸ்பிரீத் பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 259 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 1 பவுண்டரியுடன் 11, விராட் கோலி 5, கே.எல்.ராகுல் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினர்.
கேப்டன் ஷுப்மன் கில் - ஷ்ரேயஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் 3-ஆவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பினர். 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80 ரன்கள் சேர்த்த கில், காயம் கண்டு "ரிட்டையர்டு ஹர்ட்' ஆகி வெளியேற, ஷ்ரேயஸ் ஐயர் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு விடைபெற்றார்.
முடிவில், வாஷிங்டன் சுந்தர் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, அக்ஸர் படேல் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 57 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜாஷ் டங், சாம் கரன் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








