கட்டணக் கழிவறைகளில் அடாவடி வசூல்
சிதம்பரம், ஆக. 7: சிதம்பரம் நகராட்சிக்குச் சொந்தமான கீழவீதி மற்றும் பஸ் நிலைய கட்டணக் கழிவறைகள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கட்டண வசூல் ஆகியவற்றில் நகராட்சி விதித்த கட்டணத்தை விட கூடுதல் தொகை வச


சிதம்பரம், ஆக. 7: சிதம்பரம் நகராட்சிக்குச் சொந்தமான கீழவீதி மற்றும் பஸ் நிலைய கட்டணக் கழிவறைகள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கட்டண வசூல் ஆகியவற்றில் நகராட்சி விதித்த கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியுற்றுள்ளனர்.
சிதம்பரம் நகராட்சியால் ஏலம் விடப்படும் கீழரதவீதி மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கட்டணக் கழிவறைகளில் நகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண விவரம் குறித்தும், யாரிடம் புகார் தெரிவிப்பது குறித்தும் அறிவிப்புப் பலகை வைக்கப்படவில்லை.
நகராட்சி விதிப்படி சிறுநீர் கழிக்க 50 பைசாவும், மலம் கழிக்க ரூ.1-ம், குளிக்க ரூ.2-ம் வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்போது சிறுநீர் கழிக்க ரூ.2-ம், மலம் கழிக்க ரூ.5-ம், குளிக்க ரூ.10-ம் ஒப்பந்தக்காரர்களால் அடாவடியாக வசூலிக்கப்படுகிறது என ஆலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
நகராட்சியால் கட்டணக் கழிவறைகள் கூடுதல் தொகைக்கு ஏலம் விடப்படுவதால் அதைப் பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் அதிக தொகை வசூலிக்கின்றனர்.
மேலும் வழங்கப்படும் தொகைக்கு நகராட்சி கோபுர சீலுடன் ரசீது வழங்கப்படாமல் பழைய ரசீது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கீழவீதி கட்டண கழிவறை கடும் போட்டியில் ஒப்பந்தக்காரர் ஒருவரால் ரூ.11 லட்சத்துக்கு ஏலத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் சுற்றுலா வாகனங்களுக்கான கட்டண வசூல் ரூ.6 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஆலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களுக்கு நகராட்சி விதிப்படி கார்களுக்கு ரூ.10-ம், வேன்களுக்கு ரூ.15-ம், பஸ்களுக்கு ரூ.25-ம் வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்போது கார்களுக்கு ரூ.25-ம், வேன்களுக்கு ரூ.50-ம், பஸ்களுக்கு ரூ.75-ம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர் காதர்கானிடம் கேட்டதற்கு, "நகராட்சி விதித்த கட்டணப்படி ஒப்பந்ததாரர்களிடம் நாங்கள் ரசீது அச்சடித்து கொடுத்துள்ளோம். நாங்கள் ஆய்வு மேற்கொள்ள செல்லும் போது சரியாக உள்ளது. இந்த ஆண்டு அதிக போட்டி நிலவியதால் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுத்துள்ளதால் கூடுதலாக தொகை வசூலிப்படுவதாக' தெரிவித்தார்.
இது குறித்து அந்த வார்டு உறுப்பினராக உள்ள சிவராம தீட்சிதரை கேட்டபோது "கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவருக்கும் தெரியும்' என மழுப்பலாக பதில் தெரிவித்தார். இதனால் நடராஜர் ஆலயத்திற்கு வரும் ஏழை - எளிய மக்களும், சுற்றுலாப் பயணிகளும், மிகவும் அவதியுற்றுள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு கழிவறைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து பொதுமக்கள் நலன் கருதி நகராட்சியே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நகரமன்ற உறுப்பினர் ஏ.ரமேஷ் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இதே நிலைதான்...
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் கட்டண கழிவறைகள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கும் ஒப்பந்ததாரர்களால் பொதுமக்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அடிப்படை வசதியான கழிவறை, குளியலறை மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முதல்வரோ அல்லது துணைமுதல்வரோ நடவடிக்கை எடுத்து குறைந்த கட்டணம் வசூலிக்கவும், தமிழகம் முழுவதும் கட்டணக் கழிவறைகளை நகராட்சியே ஏற்று நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...