9-ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு விடுமுறை இல்லை!

சேலம், ஏப். 27: சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்வு எழுதி பிளஸ் 2 செல்ல உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன. கட்டமைப்பு வசதி, கல்வித் தரம் போன்றவற்றில் அரசுப் பள்ள
Updated on
2 min read

சேலம், ஏப். 27: சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்வு எழுதி பிளஸ் 2 செல்ல உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

கட்டமைப்பு வசதி, கல்வித் தரம் போன்றவற்றில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு நிகரான சீருடை, அடையாள அட்டை, கணினி பயிற்சி, ஆங்கில பேச்சுப் பயிற்சி போன்றவற்றில் அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கி வந்தாலும், தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் விகிதம் என்னவோ தனியார் பள்ளிகளில் தான் அதிகமாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2-வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, வழக்கமாக தனியார் பள்ளிகள் கையாளும் சிறப்பு வகுப்பு அஸ்திரத்தை அரசுப் பள்ளிகளும் நடப்பாண்டில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

சேலம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கோ, பிளஸ் 1 முடித்து பிளஸ் 2 செல்பவர்களுக்கோ வழங்கப்படவில்லை.

மாறாக இவர்களுக்கு அடுத்த வகுப்புகளுக்கான பாடங்களை நடத்த தினசரி காலை 10 முதல் பிற்பகல் 1.30 வரை சிறப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன. பிளஸ் 1 முடித்த மாணவிகளுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக சேலம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் 9-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தும் பணி மாவட்டத்தின் பல அரசுப் பள்ளிகளில் தொடங்கியுள்ளது. பொதுப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் 10-ம் வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு விடப்படவில்லை. எனினும், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட நூல்களை வைத்து பாடங்களை நடத்தி வருகின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள இந்த சிறப்பு வகுப்பு முடிவை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டவே செய்தாலும், ஒரு கல்வியாண்டு என்பது இத்தனை நாள்கள்தான், அதில் இத்தனை பாடங்களை நடத்த வேண்டும், தேர்வு நடத்த வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விதிகள் வகுத்துக் கொடுத்துள்ள அரசே கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துவது எந்த வகையில் நியாயம் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குழந்தைகளை கோடை விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வரவழைப்பது ஒட்டு மொத்தமாக வகுப்பு ஆசிரியர்களின் பொறுப்பு என்பதால், வாகனங்களில் வரும் மாணவ, மாணவிகள், மழை, வெயில் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு இடையே பத்திரமாக வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமே என்ற கவலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் கே.ராஜராஜன் கூறியது: அரசு உத்தரவின் பேரிலும், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. கோடை விடுமுறை முழுவதும் இந்த வகுப்பு நடைபெறாது. தேர்வு முடிவுகள் வரும் வரையிலும், ஆசிரிய, ஆசிரியைகள் விடுமுறையில் செல்லும் வரையிலும் இந்த வகுப்புகள் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com