/

குழந்தைகளின் தலைக்கு மேல் ஆபத்து!

கள்ளக்குறிச்சி அருகே பெத்தானூர் குழந்தைகள் நல மையத்தின் மேற்கூரையின் ஓடுகள் சேதமடைந்து எந்நேரமு விழும் ஆபத்து உள்ளது. பச்சிளம் குழந்தைகள் பயிலும்

News image
Updated On :17 பிப்ரவரி 2013, 9:44 pm

எஸ். முரளி

கள்ளக்குறிச்சி அருகே பெத்தானூர் குழந்தைகள் நல மையத்தின் மேற்கூரையின் ஓடுகள் சேதமடைந்து எந்நேரமு விழும் ஆபத்து உள்ளது. பச்சிளம் குழந்தைகள் பயிலும் இம்மையத்தில் அசம்பாவிதம் நேரும் முன்பு, மேற்கூரையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கள்ளக்குறிச்சி தாலுக்காவிற்கு உட்பட்டது பெத்தானூர் கிராமம். சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில், குழந்தைகள் நல மையம் 1982ல் தொடங்கப்பட்டது. இதில் 3 வயது முதல் 5 வயது வரையில் சுமார் 20 சிறுவர்கள் பயின்று வருகின்றனர்.

இக் குழந்தைகள் நல மையத்தில் மேற்பார்வையாளர் இடம் கடந்த 6 மாதங்களாகவே காலியாக உள்ளது. க.செல்வமணி என்பவர், கூடுதல் பொறுப்பில் கவனித்து வருகிறார். இதற்கு ஒரு உதவியாளர் உள்ளார்.

  இக் கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து ஒரு வருடமாகிறது. எந்நேரமும் முற்றிலும் உடைந்து விழும் நிலையில் உள்ள இக்கூரையின் கீழ், மழலைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

விபத்து அபாயம் நிலவுவது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர், கோட்டாட்சியர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ந.சண்முகவள்ளி உள்ளிட்டோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.

தவிர, இம்மையம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகி விடுவதாக சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசனிடம் கேட்டபோது, ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பிஞ்சுக் குழந்தைகள் பயிலும் இம்மையத்தில் அசம்பாவிதம் நேரும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.