கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் வழங்குவதில் குளறுபடி

கடலூர் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் துறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், ரேஷன் பொருள்கள் பெறுவதிலும், உள்தாள் பொருத்துவதிலும் ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2013, 9:53 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் துறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், ரேஷன் பொருள்கள் பெறுவதிலும், உள்தாள் பொருத்துவதிலும் ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 7 தாலுகாக்களில் மொத்தம் 1371 ரேஷன் கடைகள் உள்ளன. குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலக கோப்புப்படி 7 லட்சத்து 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. குடிமைப் பொருள் துறை ஆன்லைன் பதிவின்படி 6,75,957 கார்டுகள் உள்ளன.

கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பரில் எவ்வித விசாரணையும் இல்லாமல், கடலூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் ரேஷன் கார்டுகள் (சர்க்கரை ஒதுக்கீடு) போலி என அப்போதிருந்த மாவட்ட வழங்கல் அலுவலரால் நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது, நீக்கம் செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மீண்டும் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி தாலுகாவில் 194 கடைகளும், கடலூர் தாலுகாவில் 187, குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 139, சிதம்பரம் தாலுகாவில் 264, காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் 193, விருத்தாசலம் தாலுகாவில் 237, திட்டக்குடி தாலுகாவில் 157 கடைகளும் உள்ளன. இதில் சிதம்பரம் தாலுகாவில்தான் அதிகமாக 264 கடைகள் உள்ளன.

தற்போது ஆன்லைன் பதிவுப்படி உள்தாள் வழங்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை கோப்பு பதிவுப்படி உள்ள மீதமுள்ள சுமார் 35 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு உள்தாள் வழங்கப்படவில்லை. அதுபோன்று தமிழக அரசின் பொங்கல் பரிசும் வழங்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் ரேஷன் கடைகளுக்கு குறைந்தளவே மண்ணெண்ணெய், துவரம்பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரேஷன் கடைக்கு வரும் பொருள்களுக்கு அந்தந்த தாலுகாக்களில் உள்ள கூட்டுறவு விற்பனை சங்கம் இறக்குகூலி வழங்க வேண்டும். அச்சங்கத்திற்கு அரசு 100 கிலோ மூட்டைக்கு ரூ.17 மானியம் வழங்குகிறது. ஆனால் இறக்குகூலி தொகையை அச்சங்கம் வழங்குவதில்லையாம்.

இதனால் ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு லோடுக்கு ஆயிரம் ரூபாய் வரை இறக்குகூலியை வழங்க வேண்டி உள்ளது என தெரிவிக்கின்றனர். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சராசரியாக மாதம் ரூ.28 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறதாம். ஆனால் கூட்டுறவுத் துறை மூலம் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம்தான் ஊதியம் வழங்கப்படுகிறதாம். எனவே கூட்டுறவுத்துறை மூலம் ரேஷன் கடையில் பணிபுரியும்

பணியாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறைகேடுகளையும், குளறுபடிகளையும் தவிர்க்க தமிழகத்தில் கைரேகை பதிவு செய்யும் டிஜிட்டல் ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும், பொருள்களை பாக்கெட்டு மூலம் வழங்க வேண்டும் என ரேஷன் கடைப் பணியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.