/

அரசு பேருந்து மோதி இருவர் சாவு: அதிர்ச்சியில் மற்றொரு அரசு பேருந்து கவிழந்ததில் மூவர் காயம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து சத்தத்தைக் கேட்டு மற்றொரு அரசுப் பேருந்து சாலை ஓரம் உள்ள பாலத்தில் கவ

News image
Updated On :14 நவம்பர் 2016, 11:10 am

கோ.ஜெயக்குமார்


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து சத்தத்தைக் கேட்டு மற்றொரு அரசுப் பேருந்து சாலை ஓரம் உள்ள பாலத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயம் அடைந்ததனர்.

கோயமுத்தூரிலிருந்து ராஜபாளையம் நோக்கி ஒரு அரசுப் பேருந்து திருமங்கலம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக சத்தியமங்கலத்திலிருந்து செங்கோட்டை நோக்கி ஒரு அரசுப் பேருந்தும் வந்து கொண்டிருந்தது.

அழகாபுரியை அடுத்து மாயிருளம்பட்டி விலக்கு அருகே கோயமுத்தூர் பேருந்தை, சத்தியமங்கலம் பேருந்து முந்திச் செல்ல முயன்றது. அப்போது கிருஷ்ணன்கோவிலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் (53), மங்கலம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த ராஜூ (43) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். முந்திச் செல்ல முயன்ற சத்தியமங்கலம் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்புராஜ் மற்றும் ராஜூ உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் லாரி ஓட்டுநர்கள் என்பது தெரியவந்தது. தகவலின் பேரில் கிருஷ்ணன்கோவிலில் வைத்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

விபத்தின் சப்தம் கேட்ட அதிர்ச்சியில் கோயமுத்தூர் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரம் உள்ள ஓடையில் விட்டுவிட்டார். இதில் இப்பேருந்து கவிழ்ந்ததில் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த காளியம்மாள் (48), அழகாபுரியைச் சேர்ந்த சரிதா (22) ஆகியோரும் இப் பேருந்தின் ஓட்டுநர் தேவதானத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரும் காயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் சத்தியமங்கலம் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.