ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளரின் வாகனத்தை ஓட்டி வரும் காவலர் மற்றும் அவரது குடும்பத்தாரைத் தாக்கி காயப்படுத்தியதாக, சிவகாசி கிழக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் செந்தில்குமார் (30). இவர் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். மாற்றுப் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளரின் ஜூப்பின் ஓட்டுநராக தற்போது உள்ளார்.
செந்தில்குமாருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் அர்ஜூனன் என்பவருக்கும் ஊரில் வரி கட்டுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 28.4.16-ம் தேதி, செந்தில்குமாரின் தாயார் ராஜலட்சுமியிடம் எதிர் தரப்பினர் வம்பு சண்டை இழுத்துள்ளார்கள். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அர்ஜூனனை போலீஸார் அழைத்து விசாரித்து பிரச்னையை முடித்து வைத்துள்ளார்கள். காவல்நிலையத்திற்கு அழைத்து போலீஸார் விசாரணை நடத்தியதை அவமரியாதையாக நினைத்து பழிவாங்கும் எண்ணத்திலிருந்த அர்ஜூனன், சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக வேலை செய்து வரும் அர்ஜூனனின் சகோதரர் கி.மாரிமுத்து ஆகியோர் தலைமையில் 8 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி கம்பு, பாட்டில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செந்தில்குமார், இவரது சகோதரர் ராஜ்குமார், தாய் ராஜலட்சுமி ஆகியோரைத் தாக்கி காயப்படுத்தியது. படுகாயமடைந்த மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து காவலர் செந்தில்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார், சிறப்பு சார்பு ஆய்வாளர் கே.மாரிமுத்து, கே.பால்கண்ணன், பா.ரவிவர்மன், அ.தனசேகர், அ.மனோஜ்குமார், கி.அய்யனார், கி.அர்ஜூனன், க.ரகுமுருகன் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.