“உள்ளாட்சி தேர்தல்களை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானமாகவும், தெளிவாகவும் தீர்ப்பளித்தது. அதை மாநில தேர்தல் ஆணையராக இருந்த சீத்தாராமன் நிறைவேற்ற துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தடை வாங்குவதற்குதான் முயற்சி செய்தாரே தவிர, உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயகத்திற்கு உயிரூட்டும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. “உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்த முடியாது” என்று மீண்டும் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் கூறிவந்தாரே தவிர, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வார்டு மறு சீரமைப்பு, வார்டுகள் ஒதுக்கீடு செய்வதில் உள்ள இட ஒதுக்கீடு குளறுபடிகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட எதையும் மாநில தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. அதிமுக அரசும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உதவிட முன்வரவில்லை.