நம்பிக்கை வாக்கெடுப்பு: சட்ட உதவி வழங்க மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் மறுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு: சட்ட உதவி வழங்க மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் மறுப்பு

தமிழக சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் சட்ட உதவி வழங்க, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Published on


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் சட்ட உதவி வழங்க, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதால் புதிய நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி மாஃபா பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, பேரவை சபாநாயகருக்கு உள்ள அதிகாரங்கள் உள்ளிட்ட சந்தேகங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி சட்ட ஆலோசனை வழங்க, மத்திய தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலுவிடம் உதவி கேட்டிருந்தது.

அதாவது ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளது, இதில் அவரது அதிகாரம் என்ன என்பது குறித்து மத்திய தலைமை வழக்குரைஞராக இருக்கும் வேணுகோபால் ஆலோசனை வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் அவர் அளித்த பதிலில், நான் ஏற்கனவே ஓபிஎஸ் அணியினருக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருவதால், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனை வழங்க இயலாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

பொதுவாக, உச்ச நீதிமன்றம், மூத்த வழக்குரைஞர்களிடம் சட்ட ஆலோசனைக்கு உதவி கோருவதும், அதற்கு அவர்கள் உதவுவதும், மறுப்பதும் வழக்கமான ஒன்றுதான் என்பதால், இது பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருப்பதால், அதற்குள், உச்ச நீதிமன்றத்துக்கு உதவக்கூடிய வேறொரு மூத்த வழக்குரைஞர் ஒருவரை தேர்வு செய்து அவரது ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். 

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் நோட்டீஸ் பிறப்பித்து விடுவார்கள் என்றால், அநத வழக்கு நீண்ட நாட்களாக நடைபெறும். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்பது தெரிந்தால் உடனடியாக மனுவை தள்ளுபடி செய்திருப்பார்கள்.

ஆனால் இதுபோன்ற பிரச்னைகள் பல்வேறு மாநிலங்களில் எழுந்திருப்பதால், எதிர்காலத்தில் இந்த பிரச்னை நடக்கக் கூடாது என்பதற்காகவும், உரிய தீர்வினை கண்டறிந்து, நாடு முழுமைக்குமான ஒரு வழிகாட்டுதல் தீர்ப்பாக இந்த வழக்கின் தீர்ப்பை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருதுகிறது. சபாநாயகருக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகள், வழிமுறைகளையும் வகுத்துக் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருக்கலாம் என கருதப்படுகிது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com