ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு இதுவரை டி.ஜி.பி. அந்தஸ்தில் இயக்குநர் நியமிக்கப்படவில்லை. அதன் மூலம் ஊழல்கள் குறித்த விசாரணைகளை அதிமுக அரசு தடுத்து வருகிறது. அது மட்டுமின்றி அதிமுக ஆட்சியின் ஆறு வருட காலத்தில், அமைச்சர்கள் - அதிகாரிகளின் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டிய விஜிலென்ஸ் கமிஷனர் பதவி இன்னும் காலியாகவே வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பதவியின் பொறுப்பு, தலைமைச் செயலாளரிடம் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. தனி ஐ.ஏ.எஸ். அதிகாரியை கமிஷனராக நியமிக்காத காரணத்தால் தமிழக விஜிலெனஸ் கமிஷன் செயலிழந்து விட்டது.
ஊழல்களை விசாரிக்கும் ’லோக் அயுக்தா’ அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. நானே பலமுறை இதுபற்றி அறிக்கை விடுத்திருக்கிறேன். சட்டமன்றத்தில் கூட கோரிக்கை வைத்தேன். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இன்னும் அந்த அமைப்பை உருவாக்க அதிமுக அரசுக்கு மனம் வரவில்லை. ஊழல்களை விசாரிக்கும் அமைப்புகள் எல்லாம் தமிழகத்தில் முடக்கப்பட்டு உள்ளதால் ஆளுங்கட்சி அமைச்சர்கள் சுதந்திரமாக ஊழல் புரிந்து, அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், அமைச்சர்கள் ஊழல் செய்வதோடு மட்டுமின்றி நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் இந்த ஊழலுக்கு பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக அரசில் இருந்த ஒரு தலைமைச் செயலாளர் பதவியிலிருக்கும் போதே வருமானவரித்துறை ரெய்டு, இன்னொரு தலைமைச் செயலாளர் சஸ்பென்ஸன் என்பதே அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் ஊழல் கரைபடிந்து விட்டதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
ஆகவே, அதிமுக அமைச்சர்கள் மீதும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீதும் வெளிவந்துள்ள “முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்ட” ஊழல்கள் குறித்து உடனடி விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, முழுநேர கமிஷனரை நியமித்து தமிழக விஜிலென்ஸ் கமிஷனை சுதந்திரமாக செயல்பட, நேர்மையானவர் என்று பெயர் பெற்றிருக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, ஊழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தலைமைச் செயலாளருக்கு உள்ள அதிகாரத்தை சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.