இரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை

நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டிப்பாக்கப்பட்ட விலை உயர்வால் கசந்தது சர்க்கரை
Updated on
3 min read

நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரையின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை விலை இதுவரை கிலோ 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது நவம்பர் 1ம் தேதி முதல் ரூ.25 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. 

வழக்கம் போல சர்க்கரை வாங்க நியாய விலைக் கடைக்குச் சென்ற ஏழை, எளிய மக்களுக்கு சர்க்கரை விலை இரட்டிப்பாக்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டதாகவும், அதனால் வேறு வழியின்றி தமிழகத்திலும் சர்க்கரை விலை உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு மானியத்தை நிறுத்தியதால் தான் சர்க்கரை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.


இது குறித்து அவர் பேசுகையில், பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. வெளிச் சந்தையில் ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படும் துவரம் பருப்பு ரேஷன் கடைகளில் ரூ.30-க்கும், ரூ.80-க்கு வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பாமாயில் ரூ.25-க்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

சர்க்கரையைப் பொருத்தவரை குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மத்திய அரசு மானியத்தை நிறுத்திவிட்டதால் விலை உயர்த்தப்படுகிறது. கிலோ ரூ.25 என்கிற நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்ததாது என்றார்.

தமிழகத்தில் அனைவருக்குமான பொதுவினியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதால், தமிழகத்தில் பிறந்து ஏழைகளாக வாழும் மக்களுக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் தண்டனை இது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொண்டது.

அப்போது பல்வேறு அரசியல் கட்சிகளும் அதனை கடுமையாக விமரிசித்தன. கண்டித்தன. எதிர்த்தன. ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு பார்த்துக்கொள்ளும் என்று தமிழக அரசின் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. 

ஆனால், இப்போது அந்த உத்தரவாதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை.

சர்க்கரைக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு கடந்த 01.06.2017 முதல் ரத்து செய்தது. ஆனால், தமிழக அரசோ, சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தாலும் அதை தாங்களே ஏற்றுக் கொள்ளப் போவதாகவும், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் உறுதி அளித்தது. ஆனால், அடுத்த 5 மாதங்களில் வாக்குறுதியை மறந்துவிட்டு (மக்களும் மறந்திருப்பார்கள் என்று கருதி) சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பது மக்களை முட்டாளாக்கும் விஷயமே.

அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களை வழங்குபவர்களுக்கு  தொடர்ந்து ரூ.13.50 என்ற விலையில் சர்க்கரை வழங்கப்படும் என்றும், இதனால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுவது மக்களை ஏமாற்றும் செயலே. தமிழகத்தில் மொத்தமுள்ள 2.03 கோடி குடும்ப அட்டைகளில் வெறும் 9.15%, அதாவது 18,64,600 அட்டைகள் மட்டும் தான் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பெறப்பட்டவை.

இலவச அரிசி பெறும் ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை 1.91 கோடி, அதாவது 94.05% ஆகும்.  இவ்வளவு பேரை பாதிக்கும் முடிவை அறிவித்து விட்டு அதனால் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றால் எப்படி?

மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக எவ்வளவுதான் மக்கள் போராட முடியும்.

மத்திய அரசும், மாநில அரசும் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு பதில், ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மிக சொச்ச நலன்களையும் பிடுங்கிக் கொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஓரிடத்தில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் ரேஷன் கடைக்கு அரிசி கொண்டு செல்லும் லாரி சிக்காமல் தவிர்க்க, லாரியில் இருந்து ஒரு அரிசி மூட்டையை எடுத்து அந்த பள்ளத்தில் கிடத்தி, லாரி கடந்த பிறகு அதே மூட்டையை அள்ளி லாரியில் போட்டுக் கொண்டு சென்ற ஊழியர்களின் விடியோ வைரலாகப் பரவியது.

ஒரு கல்லுக்கும் மண்ணுக்கும் கொடுக்கப்படும் மதிப்புதான் ஏழைகள் சாப்பிடும் அரிசிக்கும் இங்கே கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த அரிசிக்கே மக்களை அலைகழித்து, ஆதார் இல்லை என்றால் அரிசி இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே ஏழை மக்களின் மடியில் கை வைக்கும் முறையை அரசுகள் நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை விலையை படிப்படியாகக் கூட உயர்த்தியிருக்கலாம். ஆனால் ஒரேயடியாக விலையை இரட்டிப்பாக உயர்த்தியிருப்பது தினக்கூலிகளுக்கு பெரிய சுமைதான்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆதரவற்ற முதியவர்களுக்கான மாதாந்திரத் தொகை அவர்களது வீடுகளுக்கேக் கொண்டு சென்று வழங்கும் முறை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் ரூ.1000ஐ வாங்க அலைகழிக்கப்படும் முதியவர்களின் நிலைமை பரிதாபமாகியுள்ளது.

இதற்கிடையே அவர்களது வாழ்வாதாரமாக விளங்கிய நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு வந்த பருப்புகளுக்கும் பற்றாக்குறை வந்து அவையும் காற்றில் மறைந்து போயின. இப்போது சர்க்கரை விலை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நியாய விலைக் கடைகள் மூடப்படும் என்ற வதந்திகளை மெய்ப்பிக்கத்தான் தமிழக அரசு முயன்று வருகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மற்றொருபுறம் குடும்பத்தில் எவராவது வருமான வரி செலுத்தினாலோ, வீட்டில் குளிரூட்டி அல்லது மகிழுந்து வைத்திருந்தாலோ அவர்கள் முன்னுரிமையற்ற பிரிவினராக வகைப்படுத்தப்படுவார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை என்னவென்றால் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பமும் முன்னுரிமையற்றதாக அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், தொழில்வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அதிக வருவாய் ஈட்டும் பிரிவினராக கருதப்பட்டு அவர்களும் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர் என்று கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அறிவித்தது. 

எனினும், அவர்களுக்கு தொடர்ந்து நியாயவிலையில் பொருட்கள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது தமிழக அரசு. சர்க்கரை மானியம் போல இந்த உறுதி மொழி என்று காற்றில் பறக்கப் போகிறதோ என்ற கவலையில் நடுத்தர வர்க்கத்தினர் ஆழ்ந்துள்ளனர்.

விலையேற்றத்தால் சர்க்கரையும் கசந்து போனதே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com