கர்நாடகாவில் காவிரியின் பிறப்பிடமான தலைக்காவிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கர்நாடக அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்டதால், அணைக்கு வரும் நீர் முழுக்க உபரி நீராக காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது 2.40 லட்சமாக உயரும் என்று கூறப்படுகிறது.
ஒகேனக்கல்லில் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் ஆர்ப்பறித்துக் கொண்டு கொட்டுகிறது. காவிரி கரையோரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கும் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்துக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாரத்தில் காவிரி கரையோர பகுதிகளில் மத்திய நீர்வள ஆணையம் 4வது முறையாக வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 120.30 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.70 லட்சத்தில் இருந்து தற்போது 1,65,800 லட்சம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,65,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானி சாகர் அணை நிரம்பி பவானி ஆற்றில் வெள்ள நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் ஈரோடு மாவட்டம் கொடிவேரி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் பாய்ந்தது. பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் வேளாண் நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் தென்னை, வாழை போன்ற விளைபொருட்கள் வெள்ளத்தில் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து 4000 கன அடி நீரும், சேர்வலாறு அணையில் இருந்து வினாடிக்கு 8,814 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அதே போல ராமநதி, கடனா நதியிலும் தலா 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.