5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வால்பாறையில் 310 மி.மீ.

மேற்கு திசை காற்று வலுவடைந்து தொடர்ந்து நீடிப்பதால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
Published on
Updated on
1 min read


மேற்கு திசை காற்று வலுவடைந்து தொடர்ந்து நீடிப்பதால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியது:
மேற்கு திசைக்காற்று வலுவடைந்து தொடர்ந்து நீடிப்பதால், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும். தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை, இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
வால்பாறையில் 310 மி.மீ.: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கோவை மாவட்டம், வால்பாறையில் 310 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் 190 மி.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 170 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 120 மி.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர்பஜாரில் 110 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 90 மி.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 70 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறில் தலா 60 மி.மீ. மழையும் பதிவாகின.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35-45 கி.மீ. முதல் 55-60 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 35-45 கி.மீ. முதல் 55-60 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசும். எனவே, மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.