ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதிபதி வஜீப்தார் பதவி விலகல்? 

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற  நீதிபதி வஜீப்தார் தாமாகவே முன்வந்து பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதிபதி வஜீப்தார் பதவி விலகல்? 

புது தில்லி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற  நீதிபதி வஜீப்தார் தாமாகவே முன்வந்து பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வாதிட்டது.

ஆனால், தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்ததோடு,  ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மனு மீதான விசாரணையின் பொழுது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற வேண்டும் என்றும், இந்த குழுவானது 6 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெ.வஜீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்து  பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிபதி எஸ்.ஜெ.வஜீப்தார் பஞ்சாப்  மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தவராவார்.

இக்குழுவுக்கு குறிப்பிட்ட ஆலை அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எல்லா விதமான ஆய்வுகளையும் செய்ய உரிமை உள்ளது. இக்குழு அளிக்க உள்ள அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த ஆலையின் செயல்பாடுகள் தொடர்பான உரிய முடிவு எடுக்கப்படும் என்பதால் இக்குழு உருவாக்கமானது முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் இந்த குழு மேற்கொள்ளும் ஆய்வு தொடர்பான எல்லா செலவுகளையும் தமிழக அரசுதான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற  நீதிபதி வஜீப்தார் தாமாகவே முன்வந்து பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் பணியில் தமக்கு விருப்பமில்லை என்று தெரிவித்து அவர் பதவி விலகிக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com