
கமுதி: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ரத்தம் கொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் தங்கபாண்டி (27) - முத்து (23) தம்பதி. இவர்களுக்கு, ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முத்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பத்து நாள்களுக்கு முன், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்ற முத்துவுக்கு, ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதாகவும், அதனால் ரத்தம் ஏற்ற வேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார். அதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு, முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். ஆனால், ரமேஷ் ரத்தத்தை பரிசோதிக்காமல் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து, சேமித்து வைத்துள்ளனர். பரிசோதிக்காத இந்த ரத்தம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, ரத்த தானம் செய்த ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக, மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதில், ரமேஷுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, ரமேஷ் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதாகவும், தான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர் சோதனையில் முத்துவுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. உடனே அவருக்கு கூட்டு மருந்து சிகிச்சை துவங்கபட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி ரத்த வங்கி ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுளள்னர். மருத்துவமனை மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரத்தம் கொடுத்த வாலிபர் ரமேஷ் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ராமநாதபுரம் மாவட்டம கமுதி அருகேயுள்ள திருச்சிலுவைப்புரம் என்னும் ஊரில் உள்ள அவர் அங்கு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக முதல் உதவி செய்யப்பட்டுஅவர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.