

பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களிலேயே கருகி வரும் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நாகையில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
காவிரி நதி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளையும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதையும், டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீர் உபயோகமற்ற உவர் நீராக மாறியுள்ளதையும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.
தமிழக அரசு வியாழக்கிழமை நடத்தும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்க மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்த பரிசீலனைக்கும், கர்நாடக மாநிலத்திலிருந்து முறைப்படி தண்ணீர் பெறவும் வலியுறுத்தப்படும்.
நிகழாண்டில், கர்நாடக மாநிலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையிலும், கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகத் தரவில்லை. நிகழாண்டில் இதுவரை 81 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்காமல் உள்ளது. தமிழக அரசு இறுதியாக கோரிய 15 டி.எம்.சி. தண்ணீரையும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
இதனால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.5 லட்சம் ஏக்கர் முதல் 6 லட்சம் ஏக்கர் வரையிலான பரப்பில் நெற்பயிர்கள் நிலத்திலேயே கருகத் தொடங்கியுள்ளன. இந்த முறை ஏற்பட்டுள்ள இழப்பு, முழுமையான உற்பத்தி செலவுக்குப் பின்னர் ஏற்பட்ட இழப்பு என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, பயிர்க் காப்பீடுத் திட்டம் மூலம் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிரான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 5 தமிழர்களின் சடலம் ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளைத் தடுக்க தமிழக அரசு முனைப்புக் காட்டாததன் மூலம், ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் கும்பலுக்கும், தமிழக ஆட்சியாளர்களுக்கும் ரகசிய தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆந்திர மாநில போலீஸாரால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், 2 நாள்களுக்கு முன்பு 5 தமிழர்கள் இறந்தது குறித்தும் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து கூலி வேலைக்காக ஆந்திர மாநிலத்துக்குச் சென்ற 50 தமிழர்களின் நிலை குறித்து அறியவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடப்பாவில் இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அரசுகள், ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, தமிழகத்தின் மலைப் பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு நிலம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும், ஆங்கிலமே ஆட்சி செய்கிறது. தமிழில் படித்தால் பணி வாய்ப்புக் கிடைக்காது என்ற அச்சத்தில், இளைஞர்கள் ஆங்கில வழிக் கல்விக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, தமிழில் படிப்பவர்களுக்குத் தனி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்ஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் மொழிதான் எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும், நீதிமன்ற மொழியாகவும் அறிவிக்க வேண்டும். 22 தேசிய மொழிகளையும் மத்திய அரசு, ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்றார் கே. பாலகிருஷ்ணன்.
கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, நிர்வாகிகள் வி. மாரிமுத்து, ஏ.வி. முருகையன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.