பாரதியார் பல்கலை. பதிவாளர் பணியிடத்தை நிரப்ப சிறப்புக் குழு

கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் பணியிடத்தை நிரப்ப 3 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Updated on
1 min read

கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் பணியிடத்தை நிரப்ப 3 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணியிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. 2014-ஆம் ஆண்டு பதிவாளராக இருந்த செந்தில்வாசன், வினாத்தாள்களை விற்பனை செய்த முறைகேடு தொடர்பான புகார் காரணமாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதவி விலகினார். இதையடுத்து பதிவாளராக தேர்வு செய்யப்பட்ட மோகன் 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பதவி விலகினார். பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக உயர்கல்வித் துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்ட நிலையில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்தக் கூட்டத்தை ரத்து செய்யும்படி உயர்கல்வித் துறை அனுப்பிய தகவலை பதிவாளர் தனக்குத் தெரிவிக்கவில்லை என்று அப்போதைய துணைவேந்தர் கணபதி பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து மோகன் பதிவாளர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, பொருளாதாரத் துறைப் பேராசிரியர் பி.வனிதா கடந்த ஓராண்டுக்கும் மேலாக பதிவாளர் பணியிடத்தை (பொறுப்பு) கவனித்து வருகிறார். இந்நிலையில், பதிவாளர் பதவியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியானது. போதுமான கல்வித் தகுதியுடன் (முதுகலை பட்டம், 15 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம்) 50 வயதை நிறைவுசெய்த, ஆனால் 55 வயதுக்கு மிகாதவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஜனவரி 12-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், இதற்கான கால அவகசாம் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தப் பணிக்கு 10-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் நிரந்தரப் பதிவாளரும் இல்லாததால் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு உறுப்பினர்களில் ஒருவரான அரசு முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், பதிவாளர் பணியிடத்தை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்மையில் உறுதி அளித்திருந்தார். இதையடுத்து, புதிய பதிவாளரைத் தேர்வு செய்வதற்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை அவர் அமைத்துள்ளார்.
இதற்கிடையே, கோப்புகளில் கையெழுத்திடுவதற்காக வியாழக்கிழமை பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்த முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், தேசிய தரவரிசைப் பட்டியலுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் விண்ணப்பிப்பது, பதிவாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் குறித்துக் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், புதிய பதிவாளர் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com